சுற்றுச்சூழலை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை: கிராம பஞ்.தலைவர் வலியுறுத்தல்

பங்காருபேட்டை: நமது எதிர்கால தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று ஹுலியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் கூறினார். பங்காருபேட்டை தாலுகா, காமசமுத்திரம் ஒன்றியம் போவி காலனியில் உள்ள சமூகநலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மகளிர் உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவில் ஹுலியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆதிநாராயணா மரக்கன்றுகள் நட்டபின், அவர் பேசும்போது, ``நமது முன்னோர்கள் சமையலுக்காக காய்ந்த விறகுகள் பயன்படுத்தினர். மரம் வெட்டி விறகாக பயன்படுத்தினாலும் அதற்கு மாற்றாக மரம் வளர்த்தனர்.

காடு வளர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்ததுடன் தங்கள் நிலங்களின் வரப்பில் மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்தனர். ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில் முன்னோர்கள் கையாண்ட அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை மட்டும் அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் பல நோய்கள் தாக்குவதுடன் மழை பொய்த்து வறட்சி தாண்டவமாடுகிறது. நாமும், நமது எதிர்கால சந்ததியினரும் சிறப்பாக வாழ வேண்டுமானால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். வாழும் காலத்தில் ஒருவர் ஒரு மரம் நட்டு வளர்த்தால் போதும், நாட்டில் பசுமை புரட்சி தானாக ஏற்படும். மாணவிகள் தொலைநோக்கு சிந்தனையுடன் மரகன்று நட்டுள்ளனர். அது அழியாமல் வளர கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: