அதிமுகவினருக்கு முன்தேதியிட்டு பயிர்கடன் கடன் தள்ளுபடியில் மெகா ஊழல்?: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

குஜிலியம்பாறை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடியில், அதிமுகவினருக்கு முன் தேதியிட்டு விவசாய கடன் வழங்கி, கூட்டுறவு கடன் சங்கத்தினர் மறைமுக முறைகேடு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பட்டா, சிட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தின் மீது விவசாயம் செய்வதற்காக நகைக்கடன் பெற்றிருந்தால் மட்டுமே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தற்போது, விவசாய கடன் தள்ளுபடியில் அதிமுகவினருக்கு முன் தேதியிட்டு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கடன் தள்ளுபடி அறிவிப்பால் உண்மையான விவசாயிகளை விட, ஆளுங்கட்சி யினரே அதிக பயனடைந்துள்ளனர். காரணம், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிட்டு ஆளுந்தரப்பினருக்கு விவசாய கடன்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் சரவணன் கூறியதாவது:கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன்களில், 80 சதவீதம் பேர் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள், மிகவும் வசதி படைத்தவர்கள், வரி ஏய்ப்பு செய்து கணக்கு காட்டுவதற்காகவே விவசாயம் செய்பவர்கள் ஆவர். பயிர் கடன் தள்ளுபடியாலும் பல லட்சம் ரூபாய் பலன் அடைந்திருக்கிறார்கள். 2021, ஜனவரி 31ம் தேதி வரையிலான பயிர்கடன் நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிப். 5ல் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்தார். முதல்வரின் இந்த உத்தரவை அறிந்த அதிமுக ஆளுந்தரப்பினர் முன் தேதியிட்டு பயிர்கடன் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதாவது, தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், மாத துவக்கத்தில் ஓபனிங் பேலன்ஸ் மற்றும் மாத இறுதியில் குளோசிங் பேலன்ஸ் என வரவு, செலவுகள் குறித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது வழக்கம். இதில் ஓபனிங், குளோசிங் பேலன்ஸ்கள் ஓரிரு நாட்கள் கடந்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை சாதகமாக்கி கொண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர், பிப்ரவரி மாதம் ஆளும்தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் விண்ணப்பத்தை முன் தேதியிட்டு விவசாய கடன் தள்ளுபடியில் பயன்பெற செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை வந்தாலும் தப்பித்துக் கொள்ளும் வகையில் முன் தேதியிட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்து அறிவுப்பூர்வமாக மறைமுக முறைகேடு செய்துள்ளனர் என்றார்.

Related Stories:

>