வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தியை தரக்குறைவாக திட்டிய ராமதாஸ்: வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது தமிழக அரசு வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்ட மசோதாவாக்கி ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கி இருக்கிறது. இதற்கு முழு முதற் காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என்று தொடர்ச்சியாக ஊடகங்களில், முகநூல் பக்கங்களில் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

இந்த இடஒதுக்கீட்டு வரலாறு, இதற்கு பின்புலமாக இயங்கியவர்கள் யார்? இந்த கோரிக்கை எப்போது எழுப்பப்பட்டது என்பதை எல்லாம் கொஞ்சம் கூட தெரியாத பாமகவில் இருக்கிற தொண்டர்கள் அல்லது ராமதாசை மட்டும் தெரிந்த இளம் தலைமுறை வன்னிய இளைஞர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்காக போராடிய, சிறைச்சென்ற பல தலைவர்களை கொச்சைப்படுத்துவதும்,   அவமானப்படுத்துவதும், முகநூல் பக்கங்களில் பதிவுகள் இடுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

10.5 சதவீத இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி, இது வருவதற்கு காரணமாக இருந்தவர் சி.என்.ராமமூர்த்தி தான்.  ஆனால், இவர் யார் என்றே தெரியாத இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரை கூலிக்கு மாரடிப்பவர் என்றும்,  திமுகவுக்கு விலை போய்விட்டார் என்றும், கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு விலை போனார் என்றும்  தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்புவதும், மிக மோசமான வார்த்தைகளால் அவரை விமர்சனம் செய்வதுமாக இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் இதன் உச்சமாக ராமதாஸ், சி.என்.ராமமூர்த்தியை பார்த்து நாய் என்றும், அவன் இவன் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சை அனைத்து வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாகவும் மிக வன்மையாக கண்டிக்கிறேன். 2010ம் ஆண்டு  வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தவர் சி.என்.ராமமூர்த்தி.  வன்னியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 15 % உள் ஒதுக்கீட்டை இன்றைக்கு ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியோடு கைகோர்த்து கொண்டு அதை வெறும் 10.5% ஆக மாற்றி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: