இலங்கைக்கு எதிரான டி20 பொல்லார்டு அதிரடியில் வெ.இண்டீஸ் வெற்றி: 11 பந்துகளில்.... 1, 0, 0, 1, 6, 6, 6, 6, 6, 6, அவுட்.

ஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆன்டிகுவாவில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.   முதலில் களம் கண்ட இலங்கை  20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின்  டிக்வெல்லா 33(29பந்து, 3பவுண்டரி, 1 சிக்சர்), நிசாங்கா 39(34பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்)  கணிசமாக ரன் சேர்த்தனர்.  வெ.இண்டீஸ் தரப்பில்  மெக்காய் 2, கெவின், எட்வர்ட்ஸ், ஹோல்டர், பிரோவோ, ஆலன் தலா ஒரு  விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் களமிறங்கியது. தனஞ்ஜெயா  4வது ஓவரில்   லெவிஸ்  28(10பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்),  கெயில்(0), நிகோலஸ்(0) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட் அள்ளினார். கூடவே   சிம்மோன்ஸ் 26(15பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்) வெளியேற, வெ.இண்டீஸ் 5ஓவருக்கு 4 விக்கெட்களை இழந்து  62ரன் எடுத்திருந்தது. ரன் குவிந்தாலும், விக்கெட் சரிந்ததால் இலங்கை முந்தியது. ஆனால் அடுத்து களம் புகுந்த கேப்டன் பொல்லார்டு, ஹாட்ரிக் விக்கெட் எடுத்த  தனஞ்ஜெயா வீசிய 6வது ஓவரின் 6பந்துகளிலும் சிக்சர் விளாசி, ஒரே ஓவரில் 36ரன் சேர்த்தார். அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 11பந்துகளில் 6 சிக்சர்களுடன் 38ரன் எடுத்திருந்தார். அதன் மூலம் டி20 ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6சிக்சர் அடித்த யுவராஜ் சிங்  சாதனையை பொல்லார்டு சமன் செய்துள்ளார்.

களத்தில் இருந்த ஹோல்டர் 29(24பந்து, 1பவுண்டரி, 2சிக்சர்), பிரோவோ 4(17பந்து)ரன் எடுத்து  இலக்கை எட்டினர். அதனால் வெ.இண்டீஸ் 13.1ஓவரிலேயே 6விக்கெட் இழப்புக்கு 134ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா, ஹசரங்கா  தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

Related Stories: