குடியாத்தம் அருகே வலசை கிராமத்தில் கி.மு. 1000 ஆண்டு பழமையான கற்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வலசை கிராமத்தில் கி.மு. 1000 ஆண்டு பழமையான கற்கால தொல்பொருட்களை  சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வில் கண்டெடுத்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் பலமனேர் சாலையில் ஆந்திர எல்லைப்பகுதிக்கு அருகில் வலசை கிராமம் அமைந்துள்ளது.  இங்கு மலைகளுக்கு அருகில் தனியார் நிலப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் இருக்கலாம் என கடந்த 2002ம் ஆண்டு மத்திய  தொல்லியல் துறையினர் வலசை கிராமத்தை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் அப்பகுதியில் குறிப்பிட்ட எந்த இடத்தில்  அகழாய்வு பணி மேற்கொண்டால் தொல்லியல் எச்சங்கள் கிடைக்கும் என்பதை சரியாக தீர்மானிக்காமல் அதை  விட்டுவிட்டனர்.

அதன்பின்னர் சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவராக இருந்த கேரளாவை சேர்ந்த ஜுனுகோஸ் என்பவர் சுய ஆர்வத்தால்  கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த இடங்களை அடிக்கடி பார்வையிட்டு வந்துள்ளார். இங்கு அகழாய்வை  மேற்கொண்டால் அரிய  தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று சில இடங்களை குறித்து கொண்டு அந்த இடத்தில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று  நீண்ட நாள் கனவுடன் இருந்துள்ளார்.தற்போது, அவர் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை அகழாய்வாராய்ச்சி பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.  

இந்நிலையில், வலசை கிராமத்தில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை பல்கலைக்கழக தொல்லியல்  துறை தலைவர் சவுந்தர்ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அனுமதி கிடைத்தவுடன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பல்கலைக்கழக 21 மாணவ, மாணவிகளுடன் செந்தூர் மலையில் அகழாய்வு பணியை செய்தனர். தொடர்ந்து 2ம் கட்ட ஆய்வாக  கடந்த 8ம் தேதி முதல் சென்னை பல்கலை கழக தொல்லியல் துறை முதுநிலை 2ம் ஆண்டு 26 மாணவ, மாணவிகள் செய்து  வருகின்றனர்.

இதில் ஏறக்குறைய 30 சதுர மீட்டர் இடத்தில் அகழாய்வு செய்ததில், பல அரிய தொல்லியல் பொருட்களை இக்குழு  கண்டுபிடித்துள்ளது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரீகமாகும்.  ஆனால், இந்த இடத்தில் கி.மு. ஆயிரம்  வருடம் பழமையான புதிய கற்காலமும்,  விவசாயம் தோன்றிய காலமும் அடங்கிய இடமாக வலசை கிராமம் இருந்துள்ளது  என்று இக்குழு கண்டுபிடித்துள்ளது.

இதில் தனிச்சிறப்பு மிக்க கண்டுபிடிப்பாக அகழாய்வு பணியில் ஈடுபட்டிருந்த ஜினுகோஸ் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:   ‘தமிழகத்தில் வலசை கிராமத்தில் தான் முதன்முதலில் சாம்பல் மேடு அமைப்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் புதிய கற்கால கருவிகள், பானை ஓடுகள், விலங்குகளின் எலும்பு கூடுகள் என அதிகளவில் கிடைத்துள்ளது.பானை ஓடுகளில் உட்புறம் ஒரு வண்ணமும் வெளிப்புறம் ஒருவண்ணமும் உள்ள ஓடுகள் நிறைய கிடைத்துள்ளன. இது அங்கே  வாழ்ந்த மக்களின் பானை செய்யும் தொழில் நுட்ப அறிவை விளக்குவதாக அகழாய்வு குழுவினர் தெரிவித்தனர். இங்கு சில  இடங்களில் இறந்தவர்களின் எலும்புகளை புதைத்து வைக்கும் வட்டக்கல் அமைப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தனர்.

கற்காலத்திற்கும்  அடுத்த நிலையிலும் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கு அறிகுறியாக இரும்பை உருக்கி வார்க்க பயன்படும் குழல்  போன்ற சுடுமண் குழாய்கள், உருகிய நிலையில் இரும்பு தாதுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான வயது மற்றும் முழு விவரங்கள் ஆய்வுக்கு பின்னர் தெரியவரும்’.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை

அரசு பல்கலைக்கழக மாணவர்கள்  கடின உழைப்பை பார்த்து  அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு அதிகபட்ச உதவிகள் செய்ய  வேண்டும், ஆய்வுகுழு மாணவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தும் பழைய டென்ட் போன்றவற்றை புதுப்பித்து தரவேண்டும்,  கடுமையான வெயில் பகுதிகளில் அகழாய்வு பணிகளில் உடலுழைப்பை கொடுத்து ஈடுபடும் இவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து  உள்ள உணவை அரசே முன்வந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: