ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு நிறைவு: கூட்டணியில் எந்தவித அதிருப்தியும் இல்லை: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என்றும், கூட்டணியில் எந்தவித அதிருப்தியும் இல்லை என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் திமுகவில் 7 கூட்டணி கட்சிகள் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும். தொகுதி பற்றி  கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். கூட்டணியில் யாருக்கும் அதிருப்தி இல்லை. பேச்சுவார்த்தை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவரவர் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் இது தொடர்பாக அறிவிப்பார். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 40 தொகுதிகள் கொடுக்கும் போது கூட்டணியில் இருந்த கட்சிகள் குறைவு.

தற்போது கூட்டணி கட்சிகள் கூடுதலாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் கேட்பதை பொறுத்து மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அனைவருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும். எடுத்த உடனே அவர்கள் கேட்பதை எப்படி கொடுக்க முடியும். பேசித்தான் முடிவு செய்யப்படும். திமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். தோழமை கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். நாளை(இன்று)கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச உள்ளோம். இன்னும் ஓரிருநாளில் பேசி முடித்து விடுவோம். உதயசூரியன் சின்னத்தில் பெருமளவில் போட்டியிடுவோம். கூட்டணி முடிந்தால் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிட போகிறது என்பது தெரியவரும். உதயசூரியன் அறிமுக சின்னம் அதனால் அவர்களும் தயாராக இருக்கிறார்கள். நாங்களும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவில்லை என்பது தவறானது. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து தலைவர் முடிவு அறிவிப்பார். 7ம் தேதி திருச்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். 8, 9ம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின்  நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அதனை முடித்து விட்டு வந்து திமுக வேட்பாளரை அவர் அறிவிக்க உள்ளார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ளது. திருச்சி கூட்டம் நடைபெறும் இடம் 370 ஏக்கர் பரப்பு. 70, 80 ஏக்கர் இடத்தை தான் நாங்கள் பயன்படுத்த போகிறோம். இதில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினர். பேட்டியின் போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி உடன் இருந்தார்.

Related Stories: