விஜய் ஹசாரே டிராபி விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்

இந்தூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தியது. எமரால்டு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய விதர்பா அணி 41 ஓவரில் 150 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அக்‌ஷய் வாத்கர் 31, சஞ்சய் ரகுநாத் 28, ஹர்ஷ் துபே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தமிழக பந்துவீச்சில் பாபா அபராஜித், கவுசிக், முகமது தலா 3 விக்கெட், சிலம்பரசன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஆட்டத்தை விரைவாக முடித்து மொத்த ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியாக ஜெகதீசனுடன் இணைந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் இன்னிங்சை தொடங்கினார்.

அதிரடியாக 2 சிக்சர் விளாசிய அவர் 14 பந்தில் 19 ரன் எடுத்து வெளியேறினார். ஜெகதீசன் 48 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கவுசிக் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஷாருக் கான் 6, அபராஜித் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தமிழக அணி 11.2 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது. முகமது 37 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ரஞ்சன் பால் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது இடம்: பி பிரிவில் ஆந்திரா, தமிழகம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆந்திரா (0.732), தமிழகம் (0.650) முதல் 2 இடங்களைப் பிடித்தன. மற்ற பிரிவுகளில் இன்று லீக் சுற்று முடிவடைந்த பின்னரே, கால் இறுதியில் மோதவுள்ள அணிகள் உறுதியாகும்.

Related Stories: