திருப்பதியில் 4ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம்: நதிகள் இணைப்பு, நீர் பங்கீடு பற்றி அமித்ஷா தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி: நதிகள் இணைப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளை பற்றி விவாதிப்பதற்காக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சிலின் கூட்டம், மார்ச் 4ம் தேதி திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பற்றி விவாதித்து தீர்வு காண்பதற்காக, ‘தென்மண்டல கவுன்சில்’ என்ற அமைப்பு உள்ளது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் நிரந்தர உறுப்பினர்களாகவும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் உள்ளன. இந்நிலையில், இந்த கவுன்சிலின் 29வது கூட்டம், திருப்பதியில் மார்ச் 4ம் தேதி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. இதில், இந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னை, தமிழ்நாடு - கேரளா இடையிலான முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.  மேலும், ஆந்திரா - தெலங்கானா இடையிலான கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் பங்கீட்டு பிரச்னை, போலாவரம், காலேஸ்வரம் நீர் திட்டங்கள் குறித்தும், ஆந்திரா - தெலங்கானா - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் அலமாதி அணை பிரச்னை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு, மகாநதி ஆகியவற்றை இணைத்து நதிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றியும் பேசப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories:

>