45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு

டெல்லி: 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு ஊசி போடப்படுகிறது. இவ்வாறு 3 கோடி பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 1 கோடியே 30 லட்சத்து 67 ஆயிரத்து 47 பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. அடுத்ததாக மார்ச் 1-ந்தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஊசி போடப்படுகிறது. இதற்காக விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஊசி போடும் பணியை செய்கின்றன. அரசு மருத்துவமனைகளில் மட்டு மல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் ஊசி போட அனுமதிக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்த்து இதய நோய், காசநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பாதிப்புக்குள்ளான 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு என்ன நோய் இருக்கின்றது என்ற விவரங்கள் அடங்கிய மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த மருத்துவ சான்றிதழ் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் வெளியிடப்படும் என கூறியுள்ளது.

Related Stories: