டெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்

புதுடெல்லி; டெல்லி பல்கலையில் மாணவர் சேர்க்கை பொதுநுழைவுத்தேர்வு மற்றும் பள்ளி மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் என்று தெரிகிறது. டெல்லி பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு கட்ஆப் மதிப்பெண் முறை  கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது.  கடந்த ஆண்டு லேடி ஸ்ரீராம் கல்லூரியில் 3 படிப்புகளுக்கு 100 சதவீத கட்ஆப்  மதிப்பெண் இருந்தது. மேலும் 30 படிப்புகளுக்கு 99 சதவீத கட்ஆப் மதிப்பெண்  இருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தபடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தி, அதன் அடிப்படையிலும் பள்ளி இறுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்த டெல்லி பல்கலை ஆலோசனை நடத்தி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய கல்விக்கொள்கைப்படி  மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் 50 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மீதம் உள்ள 50 சதவீதம் பள்ளி இறுதி ஆண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் புதிய ஆண்டில் டெல்லி பல்கலையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள். புதிய கல்விக்கொள்கையின்படி மத்திய கல்வித்துறை அமைச்சகம் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கு பொதுநுழைவுத்தேர்வை அறிவித்து இருப்பதால் இதுபற்றி அமைக்கப்பட்ட குழு பரிந்துரை அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதுபற்றி இறுதி முடிவு எடுத்துவிட்டால் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி முடிவு இறுதியாக அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

*  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைப்படி ஒரு தரமான திறனாய்வு தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும்.

* இதில் அறிவியல், மனிதநேயம், மொழிகள், கலைகள் மற்றும் தொழில்  பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

* இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் இரண்டு  முறையாவது நடத்தப்படும்.

* இந்த தேர்வுகள் மாணவர்களின் புரிதலை சோதிக்கும் வகையில் அமையும்.

* இதன் மூலம் மாணவர்களின் திறன் மற்றும் ஆர்வம் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தும்.

Related Stories:

>