சசிகலாவை தலைவர்கள் சந்திப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படாது: அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகை செல்வன்

* சென்னை திரும்பிய சசிகலா அமைதியாக இருந்த நிலையில் திடீரென அரசியல் தலைவர்கள் அவரை பார்க்க தொடங்கியுள்ளார்களே?

விடுதலையாகி 4 ஆண்டுகளுக்கு பின்பு சசிகலா வெளியில் வந்துள்ளார். அவர் ஜெயலலிதா உடன் இருந்தவர். அமமுக என்கிற கட்சியை நடத்துகிறார். இயல்பாக ஒரு கட்சி தலைவர் மற்ற கட்சி தலைவர்களை பார்ப்பது மரபு. அந்த அடிப்படையில் அவர்கள் சசிகலாவை சந்தித்திருப்பார்கள். அதனால் ஒரு அரசியல் திருப்பமோ, அரசியல் மாற்றமோ இருக்க வாய்ப்பில்லை. மேலும் பெரிய ஒரு கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருக்கா என்ன? அப்படி நடக்க வாய்ப்பில்லை.

* தொண்டர்களையும், பொதுமக்களையும் விரைவில் சந்திக்க உள்ளதாக சசிகலா கூறியுள்ளாரே?

 தாராளமாக அவர் பொதுமக்களை சந்திக்கலாம். தொண்டர்களையும் சந்திக்கலாம். ஆனால் அவர்கள் சசிகலாவை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? ஏற்றுக் கொண்டால் அவர் சந்திக்கலாம்.

* அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய சமக போன்ற கட்சி தலைவர்கள் சசிகலாவை சந்திப்பதால் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்குமா?

 ஏற்கனவே 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியில் சென்றார்கள். அவர்களை அமமுக மீண்டும் வெற்றி பெற வைத்ததா? இல்லை. அவர்கள் போட்டியிட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நிராகரித்துவிட்டனர். சரத்குமார், சீமான் போன்றவர்கள் சசிகலாவை பார்க்கிறார்கள் என்றால், அந்த கட்சியில் ஒருவராவது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா? இல்லை. ‘நட்பு முறையில் தான் நான் போனேன். மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர அரசியல் தொடர்பானது இல்லை’ என்று தான் சரத்குமார் கூறியுள்ளார். ஒரு தலைவரை ரயில் நிலையத்திலோ, விமான நிலையத்திலோ பார்க்கிறார்கள் என்றால் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்வது பரஸ்பரமான நட்பின் வெளிப்பாடே தவிர வணக்கம் சொல்வதினால் அவர் அந்த கட்சிக்கு போய்விடுவார் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

* சசிகலாவின் நடவடிக்கைகள் அதிமுக வெற்றியை பாதிக்கும் என நினைக்கிறீர்களா?

அதிமுகவின் வெற்றியை பாதிக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஒரு லட்சியப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே அதிமுக பாதிக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க அவர்கள் எடுத்த பல முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து விட்டது. இன்னும் அடுத்த கட்ட முயற்சி செய்தார்கள் என்றால் அதே தோல்வியைத் தான் சந்திப்பார்கள். தகுதி உள்ளது தப்பி பிழைக்கும். வெற்றிடத்தை காற்று நிரப்பும். அதேபோன்று தான் அதிமுக தப்பி பிழைத்துள்ளது. அதே வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கும்.

Related Stories: