இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரில் முன்னிலை பெற இந்தியா முனைப்பு: அகமதாபாத்தில் பகல்/இரவு பலப்பரீட்சை

அகமதாபாத்: இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட், பகல்/இரவு போட்டியாக அகமதாபாத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டை இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் கைப்பற்றின. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, எஞ்சிய 2 போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இதில் 3வது டெஸ்ட் போட்டி இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தி நடைபெறும் பகல்/இரவு போட்டியாக இன்று தொடங்குகிறது. இந்தியா 14 மாதங்களுக்கு பிறகும், இங்கிலாந்து 34 மாதங்களுக்கு பிறகும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. இரு அணிகளும் தங்களின் சொந்த மண்ணில் நடந்த பகல்/இரவு டெஸ்டில் தோற்காமல் இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

2வது டெஸ்டில் பெற்ற வெற்றியும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை குறிவைத்து  இங்கிலாந்தும் கூடுதல் முனைப்பு காட்டும். பேர்ஸ்டோ வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இளஞ்சிவப்பு பந்து வேகத்துக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்றாலும், மோதிரா ஸ்டேடிய ஆடுகளத்தின் தன்மை பற்றி தெரியாததால் வீரர்கள் தேர்வில் இரு அணிகளுமே கூடுதல் கவனம் செலுத்தும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைக்க 2 அணிகளும் மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பிரமிப்பூட்டும் பிரம்மாண்டம்!

1982ல் கட்டப்பட்ட அகமதாபாத் அரங்கம் தற்போது புனரமைக்கப்பட்டு, 63 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாக உருவாகியுள்ளது. 11 ஆடுகளங்களுடன் பிரதான மைதானம், பெவிலியனுடன் கூடிய 2 பயிற்சி மைதானங்கள், வலைப்பயிற்சிக்காக 9 ஆடுகளம் (உள்ளரங்கில் 6 + வெளியில் 3) அமைக்கப்பட்டுள்ளன. முன்பு 49,000 ஆக இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 1.10 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புது அரங்கில் முதல் போட்டியாக இந்தியா - இங்கிலாந்து மோதும் பகல்/இரவு டெஸ்ட் அமைகிறது. இப்போட்டிக்கு 55,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

‘பிங்க் பால்’ டெஸ்டில்...

* இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் பகல்/இரவு ஆட்டம் இது. இந்தியாவுக்கு இது 3வது பகல்/இரவு டெஸ்ட். இங்கிலாந்துக்கு 4வது போட்டி.

* வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் (2019 நவம்பர், கொல்கத்தா), இந்தியா இன்னிங்ஸ், 46 ரன் வித்தியாசத்தில் வென்றது. அடிலெய்டில் ஆஸி.க்கு எதிரான 2வது பகல்/இரவு டெஸ்டில் (2020, டிசம்பர்)  இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த 2 போட்டிகளும் 3வது நாளே முடிவை எட்டின.

* இங்கிலாந்தும் இதுவரை 3 பகல்/இரவு டெஸ்டில் விளையாடி உள்ளது. பர்மிங்ஹாமில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த போட்டியில் (2017, ஆகஸ்ட்), இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும்  209 ரன் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து அடிலெய்டில் நடந்த போட்டியில்  ( 2017, டிசம்பர்) ஆஸ்திரேலியாவிடம் 80 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்லாந்து டெஸ்டிலும் (2018, மார்ச்)   இங்கிலாந்து இன்னிங்ஸ், 49 ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

* 6 அள்ளினால் 400!

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு அஷ்வின் 74 டெஸ்டில் 377 விக்கெட் எடுத்திருந்தார். முதல் டெஸ்டில் 9, 2வது டெஸ்டில் 8 என மொத்தம் 17 விக்கெட் அள்ளியதால் இப்போது 76 டெஸ்டில் 394 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3வது டெஸ்டில் 6 விக்கெட் அள்ளினால் 400 விக்கெட் மைல்கல்லை எட்டலாம். இந்த வரிசையில் கும்ப்ளே (619 விக்கெட்), கபில்தேவ் (434), ஹர்பஜன் (417) முன்னிலை வகிக்கின்றனர்.

* முதலில் பேட்டிங் வெற்றி!

இரு அணிகளும் 2016ல் இருந்து கடைசியாக மோதிய 9 போட்டிகளில், முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக மோதிய 11 போட்டிகளில் ஒன்று கூட டிரா ஆனதில்லை (இந்தியா 6, இங்கிலாந்து 5 வெற்றி).

* இஷாந்த் 100

இந்திய வேகம் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100வது டெஸ்ட். இதுவரை 99 டெஸ்டில் 302 விக்கெட் அள்ளியுள்ளார். ஒரு இன்னிங்சுக்கு அதிகபட்சமாக 7 விக்கெட், ஒரு டெஸ்டில் அதிகபட்சமாக 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கபில்தேவுக்கு பிறகு 100 டெஸ்டில் விளையாடும் 2வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் பெறுகிறார். இந்திய வீரர்களில் சச்சின் (200 டெஸ்ட்), திராவிட் (163), விவிஎஸ் லஷ்மண் (134), கும்ப்ளே (132), கபில் (131), கவாஸ்கர் (125), வெங்சர்கார் (116), கங்குலி (113), ஹர்பஜன் (103), சேவாக் (103) ஆகியோர் வரிசையில் 11வது வீரராக இணைகிறார்.

* அகமதாபாத்தில் இந்தியா

மோதிரா பழைய அரங்கில் 1983 - 2012 வரை 12 டெஸ்ட் நடந்துள்ளன. அவற்றில் இந்தியா 4 வெற்றி, 6 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. கடைசியாக 2012 நவம்பரில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

* அணிகள்

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், கில், புஜாரா, ரகானே, மயாங்க், அஷ்வின், பும்ரா, குல்தீப், சிராஜ், ஹர்திக், பன்ட், அக்சர், கே.எல்.ராகுல், சாஹா, இஷாந்த், சுந்தர், உமேஷ். இங்கிலாந்து: ரூட் (கேப்டன்), ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோ, பெஸ், பிராடு, பர்ன்ஸ், கிராவ்லி, போக்ஸ், லாரன்ஸ், லீச், போப், சிப்லி, ஸ்டோக்ஸ், ஸ்டோன், வோக்ஸ், வுட்.

* தரங்கா ஓய்வு

இலங்கை வீரர் உபுல் தரங்கா (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2005ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான அவர் 31 டெஸ்டில் 1754 ரன் (அதிகம் 165, சராசரி 31.89, சதம் 3, அரை சதம் 8), 235 ஒருநாள் போட்டியில் 6951 ரன் (அதிகம் 174*, சராசரி 33.74, சதம் 15, அரை சதம் 37), 26 டி20 போட்டிகளில் 407 ரன் (அதிகம் 47) எடுத்துள்ளார்.

Related Stories:

>