புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க அதிமுக முயற்சிக்காது : அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் உறுதி!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம் என்று அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கூறியுள்ளார்.புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து விலகியதால் பெரும்பான்மை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் அளித்தார். இதன்மூலம் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

இதனிடையே எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உதவியுடன் ஆட்சி அமைக்க இதுவரை உரிமை கோரவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ அன்பழகன், “புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம் என்று அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க அதிமுக முயற்சிக்காது என்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு அதிமுக காரணமல்ல; நாராயணசாமி தான் காரணம் என்றும் அன்பழகன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் தேதிகள் 10 நாட்களில் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதால் இப்போது அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் தேர்தல்களை எதிர்கொண்டு ஜனநாயக வழியில் அரசாங்கத்தை அமைப்போம் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டுவதால், புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜனாதிபதி ஆட்சி அமலாகும்பட்சத்தில் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை முழுமையாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார்.சட்டசபை தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும்வரை இந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: