தமிழக அரசின் காவிரி, வைகை, குண்டாறு நதி இணைப்பு திட்டத்தை எதிர்த்து சட்ட போராட்டம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: ‘காவிரி நதியில் கிடைக்கும் கூடுதல் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்த முயற்சி செய்வதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தப்படும்’ என்று கர்நாடக முதல்வர்  எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:  காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளை கர்நாடக அரசு  முழுமையாக பின்பற்றி வருகிறது. ஆனால் தமிழக அரசு வேளாண் பணிகளுக்கு மட்டுல்லாமல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் காவிரியில் கிடைக்கும்  தண்ணீரை பயன்படுத்தி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது காவிரியில் இருந்து கூடுதலாக கிடைக்கும் 45 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது.

இதற்காக 14,400 கோடி செலவில் காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளதுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக அரசின் இந்த  செயல்பாடு ஏற்று கொள்ளும் வகையில் இல்லை. காவிரி நீர்பாசன பகுதியில் எந்த திட்டம் செயல்படுத்த வேண்டுமானாலும் காவிரி கண்காணிப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். காவிரி நீர் பயன்படுத்தும் நான்கு மாநில  அரசுகளிடம் முறைப்படி தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். எனவே நதிகள் இணைப்பு திட்டம் சட்ட விதிமுறை மீறிய செயலாகும். காவிரி நதி நீர் விஷயத்தில் மாநில விவசாயிகளின் உரிமையை அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது.  தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த கர்நாடக அரசு தயாராகவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேகதாது அணைக்கு அனுமதி கேட்போம்

முதல்வர் எடியூரப்பா மேலும் கூறுகையில், ‘‘காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில்  அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு  தெரிவிக்கும்போது, அவர்கள் தொடங்கியுள்ள நதிகள் இணைப்பு திட்டம் மட்டும்   நியாயமா? இந்த கேள்வியை மத்திய அரசு, காவிரி கண்காணிப்பு ஆணையத்தில் எழுப்புவதுடன் தமிழக அரசின்  நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்கவும்  வலியுறுத்தப்படும். ஒருவேளை தமிழக அரசின் நதிகள் இணைப்பு   திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்குமானால், மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் மற்றும் மார்க்கண்டையா  தடுப்பணை திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வலியுறுத்துவோம்’’ என்றார்.

சித்தராமையா கண்டனம்

ஹாவேரியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், ``தமிழக அரசின் முடிவை கண்டிக்கிறேன். அம்மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடப்பதால் வாக்காளர்கள் மற்றும் விவசாயிகளை கவரும் வகையில்  நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். தமிழக முதல்வருக்கு நமது மாநில முதல்வர்  எடியூரப்பா கடிதம் எழுத வேண்டும்’’ என்றார்.

Related Stories: