பட்டுக்கோட்டையில் கணவனால் கைவிடப்பட்ட பெண் உடல்நலக்குறைவால் அவதி சிகிச்சைக்கு சேர்த்த இளைஞர்கள்

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்தவர் வீராச்சாமி. டிரைவர். இவரது மனைவி உஷா (40). இவர்களது மகன்கள் பாலா (9), அன்பு (5), மகள் தரணி (4). 5 ஆண்டுகளுக்கும் முன் வீராணி மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் உஷா குரும்பக்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமையல் உதவியாளராக வேலை செய்து அதை வைத்து இதே பகுதியில் ஒரு குடிசை (வாடகை) வீட்டில் 3 குழந்தைகளையும் பராமரித்து வருகிறார். அந்த பள்ளியில் 3 குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பள்ளி இல்லாததால் அதே தெருவில் முறுக்கு விற்றும், கூலி வேலைக்குக்கும் சென்று வந்தார். அருகில் வீட்டு வேலைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில் உஷாவிற்கு திடீரென கடந்த ஒரு மாத காலமாகவே உடல் சோர்வு ஏற்பட்டதுடன், சளி, இருமல் அதிகமாகி, உடல் எடை மிகக்குறைந்து படுத்த படுக்கையில் உள்ளார். இதையறிந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் பக்ருதீன், ராஜபிரபு, விக்னேஷ், அஜீஸ் ஆகியோர் உஷாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலைமை மருத்துவர் டாக்டர் அன்பழகன் வழிகாட்டுதலின்படி டாக்டர்கள் உஷாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தந்தையும் விட்டு சென்ற நிலையில், தாயும் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் உள்ளதால் 3 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து உஷா கூறுகையில், நான் கணவனால் கைவிடப்பட்டு 3 குழந்தைகளோடு நிற்கதியானேன். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லமுடியாமல் அனாதையாக இருக்கிறேன். எனவே அனாதையாக தவிக்கும் எனது 3 குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்திற்கும், எனது குழந்தைகளின் படிப்பிற்கும் வழிவகை செய்ய வேண்டும் கைகூப்பி கண்ணீரோடு கேட்டுக் கொண்டார்.

Related Stories: