2019ல் கர்நாடகா; 2020ல் ம.பி; 2021ல் புதுவை: ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து போட்டு ஆட்சி கவிழ்ப்பு..பாஜகவின் சூழ்ச்சியால் வீழ்ந்த காங்கிரஸ் கூட்டணி அரசுகள்

புதுடெல்லி: ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து போட்டு ஆட்சியிழந்த மாநிலங்களில் கர்நாடகா, மத்தியபிரதேசத்தை தொடர்ந்து புதுச்சேரியும் சேர்ந்துள்ளது. பாஜகவின் சூழ்ச்சியால் கடந்த 3 ஆண்டில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசுகள் வீழ்ந்தன.

மத்தியில் கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் மாநில அரசுகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது. கர்நாடகாவில் 2018ம் ஆண்டு பாஜக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக பதவி விலகினார்.

அதே கர்நாடகாவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் அப்போதைய முதல்வர் குமாரசுவாமி தோல்வியடைந்தார்.அப்போது, கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது கர்நாடக சட்டப்பேரவையில்  குமாரசாமி பேசுகையில், ‘நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது. அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும், காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்.

ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன்; பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன்’ என்றார். தொடர்ந்து முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். முன்னதாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதால், எடியூரப்பாவின் ஆட்சி தொடர்கிறது.

அதேேபால், மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், முதல்வருக்கு எதிராக போர்கொடி தூக்கியதோடு, தங்களது பதவியையும் ராஜிநாமா செய்தனர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால், ஆட்சியமைத்த 15 மாதங்களிலேயே பெரும்பான்மையை இழந்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. 107 எம்எல்ஏக்களை கொண்டிருந்த பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வரானார்.

கர்நாடகாவில் நடந்தது போன்று, மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக கைப்பற்றியது. அதனால், இன்றைய நிலையில் பாஜக ஆட்சி தொடர்கிறது. இவ்வாறாக இரண்டு ஆண்டுகளில் கர்நாடகா, மத்திய பிரதேசங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த நிலையில், தற்போது இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசும் பெரும்பான்மை பலத்தை இழந்து ஆட்சியை தக்கவைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு திமுக எம்எல்ஏ ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். பேரவையில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை 12 ஆகக் குறைந்தது.  எதிர்க்கட்சியினர் தரப்பில் 14 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது. எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22ம் தேதி (இன்று) பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, புதுச்ேசரி சட்டப்பேரவையில் இன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார்.

அதன்பின்னர் முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதனால், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். இவ்வாறாக கடந்த 3 ஆண்டுகளில் 2 மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி, சம்பந்தப்பட்ட கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மூலம் வீழ்ந்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதுச்சேரிக்கு பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: