பனப்பாக்கம் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் மாசு குட்டையில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்-திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறி

நெமிலி : பனப்பாக்கம் பேரூராட்சியில் குப்பைகளை குட்டையில் கொட்டி எரிப்பதால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாகி, சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த  வார்டுகளில் இருந்து தினமும் சுமார் 2 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இங்கு சேகரிக்கும் குப்பைகள்  பேரூராட்சியையொட்டி உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் கொட்டி மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த திட்டத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் முறையாக செயல்படுத்துவதில்லை. தினமும் சேகரிக்கும் குப்பைகளை  திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகில் உள்ள தண்ணீர் இல்லாத குட்டையில் கொட்டி தீவைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் அப்பகுதி  புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து அங்குள்ள பொதுமக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரித்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: