திமுகவும் கூட்டணி கட்சியினரும் தான் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்: ரவிக்குமார் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

1 எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் நீங்கள் எழுப்பிய பிரச்னைகள் என்ன?

தமிழ்நாட்டு எம்பிக்கள் தமிழில் பதவி ஏற்கலாம் என எல்லோரிடமும் கேட்டு அனைவரும் தமிழில் பதவியேற்பதற்கு முன்முயற்சி எடுத்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்கவேண்டும் என சட்ட அமைச்சரிடம் வலியுறுத்தினேன். அதனால் இப்போது தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கையைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட வேண்டுமென்று பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று அமைச்சரிடம் தந்து வலியுறுத்தினேன்.

அதனால் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. சூடான் நாட்டில் வெடி விபத்தில் இறந்துபோன தமிழர்களின் உடல்களை இங்கு கொண்டு வரவும் காயம்பட்ட தமிழர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கவும் அயலுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் செய்தேன். குடிமக்களின் அந்தரங்க விவரங்களை பாதுகாப்பதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல்செய்து அதன் மூலமாக இப்போது அரசு அதற்கான சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய அழுத்தம் தந்தேன்.

2 உங்களுடைய கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் பாஜ அரசிடம் இருந்து எதிர்பார்த்த பதில்கள் கிடைத்ததா?

நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், வினாக்கள் எழுப்புவது, ஜீரோ அவரில் உரையாற்றுவது, விதி 377ன் கீழ் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது என அனைத்து விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளேன். தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள்  தொடர்ந்து வலியுறுத்திய பிறகுதான் வெளியிடப்பட்டன. அதுபோலவே நீண்டகாலமாக காலியாக இருந்த தேசிய எஸ்சி கமிஷனுக்கான தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளும்,

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியும் தொடர்ந்து நான் குரல் கொடுத்ததால்தான் நிரப்பப்பட்டுள்ளன. எனது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் என்று பார்த்தால் மரக்காணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், தடுப்பணைகள் கட்டும் திட்டம், திருவக்கரையில் உள்ள கல்மரப் பூங்காவைப் பாதுகாக்கும் நடவடிக்கை, உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையைப் பயன்படுத்தும் ஏற்பாடு என்ற சில விஷயங்கள் நடந்துள்ளன. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் தொடர்பாக நான் எழுப்பிய பிரச்னைகளைப் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘தேசிய மெனோபாஸ் கொள்கையை’ உருவாக்கவேண்டும் என நான் எழுப்பிய கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். போஸ்கோ நீதிமன்றம் அமைப்பது தொடர்பாகவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

3 நாடாளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுகவின் செயல்பாடு எப்படி?

மக்களவையில் ஒரே ஒரு அதிமுக உறுப்பினர் தான் இருக்கிறார். அவர் தனக்கு பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைப் பாராட்டுவதற்கே பயன்படுத்துகிறார். தமிழ்நாட்டின் நலன்கள் தொடர்பாக அவர் எதையும் பேசுவதில்லை. மக்களவையைப் பொறுத்தவரையில் பாஜ எதிர்ப்பில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள திமுகவும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் தான் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.

4 சட்டமன்ற தேர்தலுக்காக எப்போது பிரச்சாரத்தை தொடங்க உள்ளீர்கள்?

தேர்தலுக்கான பணிகளை எல்லா கட்சிகளுமே தொடங்கிவிட்டன. முழுமையான பரப்புரைத் திட்டம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும். மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஆகியவை எவ்வாறு பாஜ அரசால் பறிக்கப்படுகின்றன. அதற்கு அதிமுக எப்படி துணையாக இருக்கிறது என்பதை முதன்மையாக வைத்தே இந்தத் தேர்தலுக்கான பரப்புரை இருக்கும்.

Related Stories: