சேலத்தில் பாஜ மாநில இளைஞரணி மாநாடு ஆக்கிரமித்த பகுதிகளில் சீனா பின்வாங்குகிறது: ராஜ்நாத் சிங் பேச்சு

சேலம்: சேலத்தில் தமிழக பாஜ இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநில மாநாடு, சேலம் அருகேயுள்ள மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாநில இளைஞரணி வினோஜ் பி.செல்வம் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: சேலம் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். சேலம்-சென்னை இடையே விரைவுச்சாலை பணி 2021-22ம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.  

இலங்கையில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1600 தமிழக மீனவர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 300 மீனவர்கள் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் 9 சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, நமக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சீனா பின்வாங்கி வருகிறது. ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். மாநாட்டில் பாஜ., மாநில தலைவர் எல்.முருகன், தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் முரளிதரன், மாநகர், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, கிழக்கு மாவட்ட பார்வையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: