பாரபட்சம் பாராமல் சிஏஏவுக்கு எதிரான அனைத்து வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா கால விதிமுறைகள் மீறல், குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதை எஸ்டிபிஐ வரவேற்கிறது. சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயக வழியில் அரசமைப்பை பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களாகும். இதில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு தலைவர்களும் ஈடுபட்டனர். இவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுமா என்பது முதல்வரின் அறிவிப்பில் இல்லை.

ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி வழக்குகளை ரத்து செய்வதும் அரசியல் காரணங்களுக்காக சில வழக்குகளை தொடர்வதும் என்பது மக்களையும் போராட்ட இயக்கங்களையும் பிரிக்கும் நடவடிக்கையாகவே அமையும். எனவே, பாரபட்சம் காட்டாமல், சிஏஏவுக்கு எதிரான அனைத்து போராட்ட வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளதால் மேற்கொண்டு இந்த வழக்குகளை பரிசீலிக்க காலம் எடுக்காமல், விரைவில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: