தேனி புதிய பஸ்நிலையத்தில் பூங்கா பகுதியில் டூவீலர் நிறுத்த தடை-வாகன காப்பகங்களுக்கு ஆதரவாக செயல்படும் நகராட்சி

தேனி : தேனியில் புதிய பஸ்நிலையம், பைபாஸ் ரோட்டில் உள்ளது. இதன் நுழைவு வாயிலில் இடது மற்றும் வலது பக்கம் இரண்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்ல பஸ்நிலையத்திற்கு டூவீலர்களில் வரும் பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல டூவீலர் வாகன காப்பகங்கள் உள்ளன. இந்நிலையில், பயணிகளை வழியனுப்ப பஸ்நிலையம் வரும் உறவினர்கள், தங்களது டூவீலர்களை தற்காலிகமாக நிறுத்த, பூங்காக்களின் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பஸ்நிலையத்திற்கு டூவீலர்களில் வருபவர்கள், தங்களது டூவீலர்களை வாகன காப்பகங்களில்தான் நிறுத்த வேண்டும் என குத்தகைக்கு எடுத்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி நகராட்சி நிர்வாகம் வாகன காப்பக குத்தகைதாரர்களுக்கு ஆதரவாக, பஸ்நிலைய பூங்கா பகுதிக்குள் டூவீலர் நுழைவதை தடுக்கும் வகையில், பஸ்நிலைய இடதுபுற நுழைவு வாயிலில் அருகே உள்ள பூங்கா பகுதியில் இரும்பு கேட் கொண்டு மூடியுள்ளது. இதனால், பஸ் நிலையத்திற்கு வந்து உடனே திரும்ப வேண்டிய பயணிகள், தங்களது டூவீலர்களை இலவசமாக நிறுத்த முடியாத நிலையை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூங்கா பகுதிக்கு மூன்று பக்க நுழைவாயில்கள் உள்ள நிலையில், தற்போது ஒரு பக்கம் மட்டும் இரும்பு கேட் போட்டு மூடப்பட்டுள்ள நிலையில் மற்ற இருபக்கமும் இரும்பு கேட் போடுவதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பயணிகளின் வசதிக்காக இலவசமாக வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: