அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க அமமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்த சசிகலா: அதிமுக நிர்வாகிகளுடனும் பேச்சு

சென்னை: அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க அனைத்து மாவட்ட அமமுக நிர்வாகிகளையும் சசிகலா சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த வெளியே வந்துள்ள சசிகலா தற்போது சென்னையில் தங்கி உள்ளார். மேலும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தனக்கு விசுவாசமான தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா பத்திரிகையாளர்கள் சந்திப்பை கூட நடத்தவில்லை. இதனால், சசிகலா என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில், தொடர் ஓய்வுக்கு பிறகு சசிகலா மாவட்ட நிர்வாகிகளை சென்னை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் சென்னைக்கு காரிலேயே வந்ததால் சசிகலாவிற்கு கடும் உடல்சோர்வு ஏற்பட்டது. இதேபோல், சிறையில் இருக்கும் போது அவர் சாதாரண உணவையே எடுத்துக்கொண்டார். இதனால், அவருக்கு உடல்நல பிரச்னைகளும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடல்நிலையை கவனித்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

சென்னை திரும்பினாலும் 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால், சென்னை வந்த சசிகலாவை டிடிவி.தினகரன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கவனித்து வருகின்றனர். பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் தினம்தோறும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது உடல்சோர்வில் இருந்து மீண்டுள்ள சசிகலா முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

இதற்காக சென்னை வருமாறு மூத்த நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதேபோல், சசிகலா அதிமுகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். அவர்களையும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். திருமண மண்டபம் அல்லது ஓட்டலில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள், தேர்தல் பிரசார ஏற்பாடுகள், அதிமுகவை மீட்டெடுப்பது, மாவட்ட அளவில் ஆதரவாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தேதி ஓரிரு நாட்களில் கட்சி தலைமை தரப்பில் இருந்து வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: