கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அதிமுக தேர்தல் பிரசார பிரமாண்ட மாநாடு: 28ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது

சென்னை: பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அதிமுக தேர்தல் பிரசார மாநாடு வருகிற 28ம் தேதி விழுப்புரத்தில் பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரலில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜ இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் எவ்வளவு தொகுதி என்பது முடிவாகிவிடும் என்றும் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இதையடுத்து தீவிர பிரசாரத்தில் இறங்க பாஜ மாநில தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வர முடிவு செய்துள்ளனர்.வருகிற 21ம் தேதி சேலத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். அவர் பாஜ இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 23ம்தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடி மீண்டும் வருகிற 25ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். அவர் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது, அதிமுக - பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகிற 28ம் தேதி விழுப்புரம் வருகிறார். அமித்ஷா வருகிற 28ம் தேதி தமிழகம் வருவதற்குள் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், அவர்களுக்கு எத்தனை சீட் வழங்குவது உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 28ம் தேதி விழுப்புரத்தில், அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மிக பிரமாண்ட தேர்தல் பிரசார மாநில மாநாட்டை நடத்த அதிமுக ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயாராகி வருகிறது.

இந்த கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது, அதே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், எல்.முருகன், பிரேமலதா, ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்களையும் அந்த பிரசார மாநாட்டில் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டை மிக பிரமாண்டமான தேர்தல் பிரசார மாநாடாக நடத்திக்காட்ட அதிமுக தலைவர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு விடும் என்று அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். அமித்ஷா வருகிற 28ம் தேதி தமிழகம் வருவதற்குள் அதிமுக கூட்டணியில்கட்சிகளுக்கான சீட் வழங்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும்.

Related Stories: