கவர்னரின் செயலரிடம் நம்பிக்கையில்லா தீர்மான மனு சட்டசபையை கூட்டி முதல்வர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்: ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் தெரிவித்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று மதியம் கவர்னர் மாளிகை சென்றனர்.

அங்கிருந்த கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர். வெளியே வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறுகையில், ஆளும் அரசு மெஜாரிட்டியை இழந்திருக்கிறது. எனவே முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தை கூட்டி உடனே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றார். பாஜவைச் சேர்ந்த நமச்சிவாயம், அதிமுக எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் கூறுகையில், நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக சொன்னோம்.

ஆனால் சிறுபிள்ளைத்தனமாக மெஜாரிட்டி இருப்பதாக முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். தற்போது 14 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான மனுவை கவர்னரின் செயலரிடம் கொடுத்துள்ளோம். ஒன்றிரண்டு தினங்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என்றார். இன்னும் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். அவர்களும் வெளியே வருவார்கள். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கலாம் என்ற முதல்வர் நாராயணசாமியின் கனவு பலிக்காது என்று  இருவரும் தெரிவித்தனர்.

* தமிழிசை இன்று பதவியேற்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்க உள்ள தெலங்கானா கவர்னர் தமிழிசை நேற்று மாலை தமிழிசை புதுச்சேரி வந்தடைந்தார். இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் துணை நிலை ஆளுநராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா அழைப்பின் பேரில் பாஜக தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு புதுச்சேரியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கின்றனர்.

Related Stories: