மத்திய அரசின் சட்டங்களும் திட்டங்களும் தமிழகத்துக்கு எதிரானவை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா

* நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக மதிமுக என்ன மாதிரியான யுக்திகளை கையாளப் போகிறது?  அதிமுக ஆட்சியை வீழ்த்துவது தான் தமிழகத்தில் எல்லாருக்குமான ஒரு சிந்தனையாக உள்ளது. புதுச்சேரி முதல்வர் தனது மாநில உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார். ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைகளுக்காக குறைந்தபட்ச எதிர்ப்பை கூட அதிமுக ஆட்சியாளர்கள் காட்டவில்லை. இன்று நாள்தோறும் மக்கள் மீது விலைவாசி உயர்வை ஏற்றி பல ஆயிரக்கணக்கான பணத்தை பறிக்கின்றனர். ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து அவர்களை வெற்றி காணும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தேர்தலில் வெற்றி காண்போம்.

* இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் தலைகாட்டாத மத்திய அமைச்சர்கள் தேர்தல் வந்த உடன் தமிழகத்துக்கு தொடர்ச்சியாக வருகிறார்களே?  மத்தியில் பாஜவும், மாநிலத்தில் அதிமுகவும் நல்லாட்சி மக்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால் இவர்கள் இப்படி வந்து தமிழகத்தை முற்றுகையிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் எல்லா சட்டங்களும், திட்டங்களும் தமிழகத்துக்கு எதிரானதாகவும் ஒட்டு மொத்த ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும் தான் மத்திய அரசு கொண்டு வந்தனர். ஒரு சில கார்பரேட்டுகளுக்காக தான் இந்த ஆட்சி நடக்கிறது என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மதவாத சர்வாதிகார ஆட்சியாக தான் நடக்கிறது. அவர்களுக்கே மக்களுக்கான நல்லாட்சியை வழங்கவில்லை என்பது தெரிகிறது. அதனால் தான் தமிழகத்தை முற்றுகையிடுகின்றனர்.

* இந்த தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவீர்களா? மதிமுக தலைமையில் ஒரு அணி உருவாகி போட்டியிட்டால் எங்கள் தலைவரிடம் நாங்கள் உரிமையாக கேட்கலாம் அதில் தவறு கிடையாது. நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் போது, திமுக எந்தெந்த தொகுதிகளை மதிமுகவுக்கு ஒதுக்குகிறது என்பது தெரியாது. அதில் யார் போட்டியிடுவார்கள் என்பது தெரியாது. அது கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம். வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன்.

* முந்தைய கால கட்டத்தில் மதிமுகவிடம் இருந்த வேகம் தற்போது இல்லையே? மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை மதிமுக தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. மதிமுகவின் கூட்டங்களுக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சப்படவில்லை. மதிமுக வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வைகோ தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் எப்படி எல்லாம் பணியாற்ற முடியுமோ அத்தனை சக்திகளையும் பயன்படுத்தி பணியாற்றினோம்.

Related Stories: