மகன் டிக்கெட்டில் கொச்சிக்கு செல்ல முயன்றவர் கைது: பெங்களூரு விமான நிலைய சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் அதிரடி

பெங்களூரு: மகனின் பெயரில் உள்ள டிக்கெட்டில் கேரள மாநிலம் கொச்சிக்கு செல்ல முயற்சித்தவரை கெம்பேகவுடா விமான நிலைய மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்பவர்கள் ஆள்மாறாட்டம் செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து  கொச்சிக்கு செல்லும் விமான பயணிகளிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டை சோதனை செய்தனர். அப்போது முதியவர் ஒருவரின் டிக்கெட்டிற்கும் அவர் வைத்திருந்த ஆதார் கார்டிற்கும் வித்தியாசம் இருந்தது. பெங்களூருவில் இருந்து பயணிக்கும் அவரது முகவரி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் இருப்பது போன்று காண்பித்தது. அந்த முகவரி யாருடையது என்று விசாரித்தபோது, அவர் தன்னுடைய பெயர் இத்ரீஷ் என்றும், ஆதாரில் இருக்கும் முகவரி தன்னுடைய சொந்த முகவரி என்று கூறினார்.

இருப்பினும் அவர் மீது சந்தேகம் அடைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், டிக்கெட் மற்றும் ஆதார் கார்டுகளில் இருந்த முகவரிகளை சோதனை செய்தனர். அதில் இருவேறு முகவரிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், இத்ரீஷ் என்பது தன்னுடைய மகன். என்னுடைய பெயர் அப்துல் கலாம் தோக்கால் என்று கூறினார். மகனின் பெயரில் டிக்கெட் எடுத்து, அதை பயன்படுத்தி கொச்சிக்கு செல்வதாக கூறினார்.

மேலும் இவரது சொந்த பெயரிலும் ஒரு ஆதார் கார்டு வைத்திருந்தார். மகன் பெயரிலும் ஆதார் கார்டு வைத்திருந்தார். திட்டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டதால் அவரை கைது செய்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆள்மாறாட்ட பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: