7 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு: குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தது: வாழ்விடங்கள் அழிப்பால் இடம் பெயர்ந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பறவைகள் இனங்கள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது. நாளையும் கணக்கெடுப்பு நடக்கிறது. குமரி மாவட்டத்திற்கு பறவைகள் இனங்கள் வருகை குறித்து ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு இன்றும் (17-ந்தேதி), நாளை (18-ந் தேதி) நடக்கிறது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பலர் ஈடுபட்டனர். 7 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

 தேரூர், சுசீந்திரம், மாணிக்கப்புத்தேரி குளம், மணக்குடி காயல், தத்தையார் குளம், பால்குளம், ராஜாக்க மங்கலம் பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. நவீன கேமராக்கள் உதவியுடன் பறவைகள் வருகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பூ நாரை, மஞ்சள் மூக்கு வாத்து, மீன் கொத்தி, தவிட்டு கொக்கு, வெண் கொக்கு, முக்குளிப்பான், வர்ண நாரை, கூழக்கடா, வர்ண நாரை, கொசு உள்ளான், உள்ளிட்ட பல்வேறு வைகயிலான பறவை இனங்கள் இருப்பது, இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

பறவைகள் வரத்து வழக்கத்தைவிட இந்த ஆண்டு மிக குறைவான அளவே இருந்தது. காலை 5 மணிக்கு தொடங்கிய கணக்கெடுக்கும் பணி காலை 9 மணி வரை நடந்தது. மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், பறவைகள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப், சுற்றுசூழல் ஆர்வலர் டேவிட்சன் உள்ளிட்டோரும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர். நாளையும் கணக்கெடுப்பு நடக்கிறது. இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது.

வழக்கமாக தென்படும் பறவைகளை விட இந்த ஆண்டு மிக குறைவான அளவே பறவைகளை காணமுடிந்தது. வழக்கமாக 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் தென்படும். ஆனால் இந்த முறை 30 இனங்கள் தான் தெரிய வந்துள்ளன. பறவைகளின் வரத்து  குறைந்து விட்டது. இதற்கு காரணம் காலசூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம். பறவைகள் வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும் பறவைகள் வரத்து குறைவதற்கு காரணமாக அமைகிறது என்றார்.

Related Stories: