கொரோனாவால் வேலையிழந்தனர் நாட்டு பசு வளர்த்து பால் வியாபாரம் செய்யும் பட்டதாரி தம்பதி

பங்காருபேட்டை: கொரோனா தொற்று பரவலால் வேலை இழந்த பட்டதாரி தம்பதி மனம் சோர்ந்து போகாமல் நாட்டு பசுக்கள் வாங்கி பால் கரந்து சம்பாதித்து வருகிறார்கள்.பங்காருபேட்டை தாலுகா, மாவனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மஞ்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த எம்.ஆர்.ஸ்ரீராம்-மஞ்சுளா தம்பதிகள். இதில் ஸ்ரீராம் முதுகலை பட்டம் முடித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திலும் மஞ்சுளா இளங்கலை பட்டம் முடித்து தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இருவரும் வேலை இழந்தனர்.சில மாதங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்ட தம்பதிகள், நாம் ஏன் பசுக்கள் வாங்கி சொந்தமாக பால் கறந்து சம்பாதிக்ககூடாது என்று தீர்மானித்தனர். பங்காருபேட்டை தாலுகாவில் எங்கு பார்த்தாலும் சீமை பசுக்கள் உள்ளது. நாட்டு பசுக்கள் இல்லை. ஆகவே நாட்டு பசுக்கள் வாங்கி பிழைக்க முடிவு செய்தனர்.

பின் ஸ்ரீராம் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து கொண்டு பஞ்சாப் மாநிலம் சென்று 5 நாட்டு பசுக்களை வாங்கி வந்தார். இதில் நான்கு பசுக்கள் தற்போது பால் கறக்கிறது. தினமும் 15 முதல் 18 லிட்டர் பால் கிடைக்கிறது. பெங்களூரு மற்றும் பங்காருபேட்டையில் நாட்டு பசு பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெங்களூருவில் லிட்டர் ஓன்று 120 முதல் 150 வரை விற்பனை செய்வதால், பாலை பெங்களூரு அனுப்பி வைக்கிறார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு செலவுகள் போக ₹1,200 முதல் 1,500 வரை லாபம் கிடைப்பதாக ஸ்ரீராம் பெருமிதம் தெரிவிக்கிறார். இன்னொருவரிடம் அடிமையாக வேலை செய்வதை காட்டிலும் சொந்த தொழில் செய்வது நிம்மதி தருகிறது என்று பெருமிதம் தெரிவிக்கிறார்கள்.

Related Stories: