ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா மே 14ம் தேதி கட்சி தொடக்கம்: தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கப்போறாராம்

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி. இவரது மகன் ஜெகன்மோகன். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  என்ற  கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக உள்ளார்.இவரது தங்கையும்  ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகளுமான ஷர்மிளா, தெலங்கானாவில் தனது தந்தையின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குவது என முடிவு செய்துள்ளார். இதற்காக 2 தேதிகள்  பரிசீலனை செய்தார். இதில் தனது தந்தையான ராஜசேகரரெட்டி முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற மே 14ம்தேதி மற்றும் ராஜசேகரரெட்டி பிறந்தநாளான ஜூலை 8ம்தேதி ஆகிய 2 தேதிகளை பரிசீலித்தார்.

ஆனால் ஜூலை 8ம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று 2ம் ஆண்டு விழா விசாகப்பட்டினத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அந்த நாளில் கட்சி ஆரம்பிப்பதை கைவிட்ட அவர், மே  14ம்தேதி புதிய கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். கட்சி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.

 ஏற்கனவே நல்கொண்டா, கம்மம் ஆகிய மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஷர்மிளா, விரைவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளார்.  ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியை தொடர்ந்து அவரது மகன் ஜெகன்மோகன் அரசியல் கட்சி தலைவராகியுள்ள நிலையில், மற்றொரு அரசியல் வாரிசாக ஒய்எஸ்ஆர் மகளும் கட்சியை தொடங்க அரசியலில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: