நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்: மத்திய அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜன. 16-ல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது. 85 லட்சம் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இதுவரை தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் டோஸ் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, கடந்த சனிக்கிழமை முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒருவர் பொது நல வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில் போலீஸ், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தடுப்பூசியில் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அவர்கள் எதைச் செய்தாலும் அது நீதித்துறையில் முடிவடைகிறது. எனவே நீதித்துறைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச், இந்த பிரச்னையை பரிசீலிப்பதாக கூறியது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Related Stories: