காண்டூர் கால்வாயின் கரைகளை ஆக்கிரமிக்கும் புதர்செடிகள்: அகற்ற கோரிக்கை

உடுமலை: மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாகக் கடலில் கலந்த தண்ணீரைத் திருப்பி விவசாயிகள் பயனடைய வகை செய்தது பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் என்னும் பிஏபி திட்டம் ஆகும்.இந்த திட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது காண்டூர் கால்வாய் ஆகும். பிஏபி தொகுப்பணைகளிலிருந்து பெறப்படும் தண்ணீரை பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு கொண்டு சேர்ப்பது காண்டூர் கால்வாயாகும். 19.300 கி.மீ நீளமுள்ள இந்த கால்வாய் பெரும்பாலும் வனப்பகுதியையொட்டியே அமைந்துள்ளது.

மட்டுமல்லாமல் சுமார் 15 கி.மீ அளவுக்கு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காண்டூர் கால்வாயில் அவ்வப்போது பாறைகள் சரிந்தும் அரிப்பு ஏற்பட்டும் சேதங்கள் ஏற்படுவதுண்டு.இதனையடுத்து 2015 ம் ஆண்டு ரூ.224 கோடி செலவில் மேற்கொண்ட புதுப்பிப்புப்பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது அதில் விடுபட்ட பகுதிகளில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காண்டூர் கால்வாயில் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தற்போது செடிகள் புதர் போல வளர்ந்திருக்கிறது.

மேலும் வனத்தையொட்டிய கால்வாயின் கரையில் மரங்கள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.இதனால் கரைகள் சேதமடைந்து நீர் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் வனத்திலுள்ள மான்,சிறுத்தை,கரடி உள்ளிட்ட வன விலங்குகள் கால்வாய் இருப்பது தெரியாமல் புதருக்குள் பதுங்க நினைக்கும் போது தவறி கால்வாய்க்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.எனவே வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து காண்டூர் கால்வாய் மற்றும் கரைகளிலுள்ள புதர்ச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: