பெரும்பான்மையை இழக்கும் அபாயம் மல்லாடி எம்எல்ஏ பதவி ராஜினாமா: புதுவை சபாநாயகர் ஏற்பாரா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்று, திமுக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நமச்சிவாயம் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக நாராயணசாமி முதல்வரானார். தொடர்ந்து நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். இது நமச்சிவாயத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இருவருக்கும் இடையிலான உறவு ஆரம்பம் முதலே உரசலாக இருந்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியும் நமச்சிவாயத்திடமிருந்து பறிக்கப்பட்டதால், முதல்வர் மீது கடும் கோபமடைந்தார்.இதனை உன்னிப்பாக கவனித்து வந்த பாஜ. ஆளும் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள நமச்சிவாயத்தை தங்கள் கட்சியில் சேர்க்கும் யுக்திகளை கையாண்டது. இறுதியாக நமச்சிவாயத்தையும் மற்றொரு எம்எல்ஏ தீப்பாய்ந்தானையும் பாஜ தங்கள் வசம் இழுத்தது. இருவரும் பதவியை ராஜினாமா செய்து பாஜவில் ஐக்கியமாகினர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கத்தால் காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்தது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் சென்றதால் 12 ஆக குறைந்தது. தற்போது திமுக 3 எம்எல்ஏக்கள், சுயேட்சை 1 என 16 பேருடன் ஆட்சியில் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஏனாம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் சிவக்கொழுந்துவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரசில் இருந்து மேலும் 2 எம்எல்ஏக்கள் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என  நேற்று காலை முதல் பரவலாக பேச்சு எழுந்த நிலையில்தான் மல்லாடி ராஜினாமா நடந்திருக்கிறது. இன்னும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தால், காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: