தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக வாக்குகளை பெற்ற அண்ணாமலை… 2014 தேர்தலை விட குறைந்த வாக்கு சதவீதம்.. என்ன காரணம்?

கோவை : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அண்ணாமலை கோவையில் தோல்வி அடைந்தார். 4.50 லட்சம் வாக்குகளுடன் அவர் இரண்டாமிடம் பிடித்துள்ளார். ஒருபக்கம், “தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக வாக்கு ( எண்ணிக்கை) வாங்கியுள்ளார். மறுபக்கம், “2014ம் ஆண்டு கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்கு சதவிகிதத்தை விட இது குறைவு. எனவே, அண்ணாமலை பாஜக வாக்கு வங்கியை உயர்த்தவில்லை.” என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து அரசியல் வல்லுநர்களிடம் கூறுகையில், “ 2014-ம் ஆண்டு கோவை தொகுதியில் பாஜக 33% வாக்குகளை வாங்கியிருந்தது. 2024ல் அண்ணாமலை 32% வாக்குகளை தான் பெற்றுள்ளார். அப்போது 11,76,626 பேர் வாக்களித்திருந்தனர்.இப்போது 13,73,529 பேர் வாக்களித்துள்ளனர். 2014 தேர்தலை விட, இந்தமுறை சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தும் கூட அண்ணாமலை 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.2014 தேர்தலில் மோடி அலை, அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளஸ் ஆக இருந்தது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர்.

இந்தமுறை ஏ,பி வாக்காளர்கள், சாதிய வாக்குகளை டார்கெட் வைத்து பாஜக சுருங்கிவிட்டது. சமூகவலைதளங்களில் அவர்கள் பரப்பிய அண்ணாமலை அலை பாமர மக்களிடம் சென்று சேரவில்லை. சி வாக்காளர்களிடம் அண்ணாமலைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.தொழில் நகரம் என்பதாலும், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது பரவலாக அதிருப்தியும் இருந்தது. பாஜக சார்பில் மற்ற வேட்பாளர்கள் நின்றிருந்தால், தற்போது வந்ததை விட சுமார் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாக கிடைத்திருக்கும். அண்ணாமலை என்பதால் சற்று அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை வைத்துக் கொண்டு பாஜக இங்கு பெரியளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது.” என்றனர்.

The post தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக வாக்குகளை பெற்ற அண்ணாமலை… 2014 தேர்தலை விட குறைந்த வாக்கு சதவீதம்.. என்ன காரணம்? appeared first on Dinakaran.

Related Stories: