தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம்; வரும் காலம் நமக்கானது: அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சசிகலா அறிக்கை

சென்னை: தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம் வரும் காலம் நமக்கானது என்று அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ஒன்றிணைந்து செயல்பட வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்; அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய சகாப்தம் படைப்போம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் ஜெயலலிதா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம். பொறுமையாக இருந்தேன்.

கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை.

இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று புரட்சித்தலைவர் ஆரம்பித்து, புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். ஜெயலலிதா “இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும், தமிழக மக்களும்தான் முக்கியம். இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது.

தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும்.

உங்கள் அனைவரையும் ரயும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள். நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுக்காகவும், ஒன்றிணைவோம் வாருங்கள். கழக தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. இனி வரும் காலம் நமக்கானது. நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்து, “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே” என்று கூறினார்.

The post தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம்; வரும் காலம் நமக்கானது: அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சசிகலா அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: