திங்கள்சந்தையில் 100 கிராம மக்கள் பயன்பெறும் சித்தா மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திங்கள்சந்தை: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தா மருத்துவமனை திங்கள்சந்தையில் சுமார் 50 வருடத்திற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சித்தா மருத்துவர், 2 மருந்தாளுனர்கள், 2 செவிலியர்கள், ஒரு துப்புரவு பணியாளர், கணக்கர் என்று 7 பேர்  பணிபுரிந்து வந்தனர். இந்த மருத்துவமனை மூலம் திங்கள்சந்தை, கல்லுக்கூட்டம், நெய்யூர், இரணியல் ஆகிய பேரூராட்சி, தலக்குளம், ஆத்திவிளை உள்பட சுமார் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்பட்டு வருகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சித்த மருந்து, எண்ணெய், லேகியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டாக இங்கு வேலை பார்த்த பணியாளர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்றனர். அந்த வகையில் 7 பேரில் 6 பேரும் ஓய்வு பெற்றனர். ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.  இருப்பினும் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை ஒன்றிய நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நோயாளிகள் போதிய மருந்துகள்  கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து மாவட்ட சித்த மருத்துவமனை கண்காணிப்பில் எடுத்து கொள்ளப்பட்டது. இருப்பினும் வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நோயாளிகளுக்கு மருந்து வழங்கப்படுகின்றன.

மற்ற நாட்களில் மருந்து, ேலகியம் உள்ளிட்ட மருந்து பொருள்கள் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு காரணம்  மாவட்ட சித்த மருத்துவமனையில் இருந்து  போதிய அளவு சித்த மருந்துகள் வழங்கப்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க மருத்துவமனையின் மேற்கூறைகள் பழுதடைந்து சிலாப்புகள் உடைந்துள்ளன. தற்போது காம்பவுண்ட் சுவரும் இடிக்கப்பட்டு சமூக விரோதிகளின் கூடமாக மாற்றி உள்ளது. இவ்வளவு பிரச்னைகள் இருந்து மாவட்ட சித்த மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொது மக்கள் நலன்கருதி பழுதடைந்த திங்கள்சந்தை சித்த மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிம் கட்ட வேண்டும். அதோடு போதிய சித்த மருந்து பொருட்கள் வழங்க வேண்டும். வாரத்தில் 7 நாட்களும் இயங்க ேவண்டும். காலியான படங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று திங்கள்நகர் பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெமினீஸ், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவருக்கு மனு அளித்துள்ளார். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி வரும் 19ம் தேதி சம்பந்தப்பட்ட சித்த மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: