ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் எலினா ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்: மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 5ம் இடத்தில் உக்ரேன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டியில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய இளம் வீரர் டேனில் மெட்வடேவ், 4ம் சுற்றுப் போட்டியில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றுப் போட்டியில் உக்ரேன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் (26), அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவும் (26) மோதினர்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 5ம் இடத்தில் உள்ள ஸ்விடோலினா கடந்த சில ஆண்டுகளாகவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முத்திரை பதித்து வருகிறார். 2019 விம்பிள்டன், யுஎஸ் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். 2020 பிரெஞ்ச் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறினார். ஆஸி. ஓபனிலும் இருமுறை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இம்முறை உறுதியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தற்போது ஒற்றையர் தரவரிசையில் 62வது இடத்தில் உள்ளார். முதல் செட்டை 6-4 என ஜெசிகா கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்த செட்டில் எச்சரிக்கையாக தற்காப்பு ஆட்டம் ஆடிய ஸ்விடோலினா, அந்த செட்டை 6-3 என கைப்பற்றினார். ஸ்விடோலினா ஆட்டத்தின் முறையை மாற்றிக் கொண்டதை கவனித்த ஜெசிகா, அதற்கேற்றவாறு 3வது செட்டில் பேஸ் லைனில் நின்றே ஆட ஆரம்பித்தார். பிளேஸ்மென்ட்டுகளிலும், சர்வீஸ்களிலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக அதிக வேகத்தில் சர்வீஸ்கள் வந்து விழ, அவற்றை ஸ்விடோலினாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜெசிகா, இந்த அதிரடி வெற்றி மூலம் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாமில் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று காலை நடந்த ஆடவர் ஒற்றையர் 4ம் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும் (25), அமெரிக்காவின் மெக்கனீஸ் மெக்டொனால்டும் (25) மோதினர். கடந்த 2019 யுஎஸ் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரன்னர் பட்டம் வென்ற மெட்வடேவ் இப்போட்டியில் 6-4, 6-2, 6-3 என நேர் செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: