கொச்சுவேளி - நிலம்பூர் ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க முடிவு: பயணிகள் சங்கம் எதிர்ப்பு

நாகர்கோவில்: கொச்சுவேளியிருந்து நிலம்பூருக்கு செல்லும் ரயிலை திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு செல்ல வசதி இல்லாத காரணத்தால் கன்னியாகுமரிக்கு ரயில் நீட்டிப்பு என்ற பெயரில் இயக்கப்படுவதற்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து நிலம்பூருக்கு இயக்கப்பட்டு வரும் ரயில் திருவனந்தபுரம் ரயில் நிலையம் இடநெருக்கடியாக இருக்கின்ற காரணத்தால் கொச்சுவேளியிலிருந்து புறப்படுமாறு மாற்றம் செய்யப்பட்டது. கொச்சுவேளி ரயில் நிலையம் திருவனந்தபுரம் நகரத்தில் ஒதுக்கு புறம்பான இடத்தில் அமைந்துள்ள காரணத்தால் இந்த ரயில் நிலையத்தை அங்குள்ள பயணிகள் பெரிதும் பயன்படுத்துவது இல்லை. இதை தவிர்ப்பதற்கு இந்த ரயிலை இடநெருக்கடி காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வைக்க முடியாதநிலை உள்ளது.

இதனால் இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கேரளாவில் உள்ள பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு தற்போது பாலக்காடு கோட்ட மேலாளர் திட்ட கருத்துரு சமர்ப்பித்துள்ளார். அது ஏற்கப்பட்டால் இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் நிலை உள்ளது. நிலம்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு வசதி இல்லாத காரணத்தால் தற்போது கொச்சுவேளியில்  வைத்து பராமரிப்பு செய்யப்படுகிறது. இனி இந்த ரயிலை நாகர்கோவில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் தேவைக்காக நாகர்கோவில் - சென்னை தினசரி ரயில், கன்னியாகுமரி புதுடில்லி தினசரி ரயில்,  கன்னியாகுமரி- ஐதராபாத் தினசரி போன்ற ரயில்கள் இயக்க முடியாத நிலை உருவாகும்.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக நிலாம்பூர் ரயிலை நாகர்கோவிலுக்கு நீட்டிப்பு செய்து இங்கு பிட்லைன் பராமரிப்பு செய்து விட்டு மாலையில் நிலாம்பூர் ரயிலாக புறப்பட்டு செல்லும் வகையில் ரயில்வே திட்டம் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது கொச்சுவேளி ரயில் நிலையத்தில் பராமரிப்பு இடங்கள் காலி ஏற்படும். வரும் ரயில் கால அட்டவணையில் திருவனந்தபுரத்திலிருந்து கேரளா பயணிகள் வசதிக்காக புதிய ரயில்கள் இயக்கப்படும். திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர் புறப்படும் மூன்று ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அனுப்பிய தெற்கு ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஒரு வழிபாதையாக இருக்கின்ற காரணத்தால் நீட்டிப்பு செய்ய முடியாது என்று பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கேரளா பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலுக்கு ரயில் நீட்டிப்பு என்றால் ஒரு வழிபாதை பிரச்சனை என எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் உடனடியாக ஒப்புதல் அளித்து விடுகின்றனர். எனவே குமரி மாவட்ட பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற ரயில் நீட்டிப்பு நடவடிக்கைகளை ரயில்வே கைவிட வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: