6 மாதத்தில் ஓய்வு பெறும் சார்பதிவாளர்களை பத்திரப்பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது: பொதுமாறுதல் விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஓய்வு பெறுவதற்கு முன்னர் உள்ள 6 மாதத்தில் சார்பதிவாளர்களை பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது என்று பொதுமாறுதல் விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள், மாவட்டப்பதிவாளர்கள் ஆகியார் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னர் பதிவுப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால், அவர்கள் பலர் பதிவு இல்லாத பணிக்கு மாற்றப்பட்டனர். இதனால், ஏற்பட்ட காலி பணியிடங்களால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுப்பணியில் இளநிலை உதவியாளர், உதவியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களில் சிலருக்கு போதிய அளவு அனுபவம் இல்லாததால் பதிவுப்பணியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் பதிவுத்துறை செயலாளர் பீலாராஜேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் உள்ள சார்பதிவாளர்களை பொதுமாறுதலில் பணியிட மாற்றம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள், திருத்தங்கள் மற்றும் தெளிவுரைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், பதிவுத்துறை தலைவர் கருத்துருவில் அரசின் வருவாய் இலக்கினை அடைவதில் வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆக்கப்பூர்வமான/துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதால், வயது முதிர்வு ஓய்வினை காரணமாக கொண்டு சார்பதிவாளர்களை ஓராண்டுக்கு முன்னரே பதிவுற்ற பணிக்கு மாற்றுவது நிர்வாக நலனுக்காக உகந்ததாக இராது என கருதப்படுகிறது. எனவே, ஓய்வு பெறுவதற்கு முன்னர் உள்ள ஓராண்டில் சார்பதிவாளர்/மாவட்ட பதிவாளர் பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது என்பதை ஓய்வு பெறுவதற்கு முன்னர் உள்ள 6 மாதத்தில் சார்பதிவாளர்/மாவட்டப்பதிவாளர் பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது என திருத்தம் மேற்கொள்ள பரிசீலிக்குமாறு கோரியிருந்தார். அதன்படி ஓய்வு பெறுவதற்கு முன்னர் உள்ள ஓராண்டில்/மாவட்ட பதிவாளர் பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது என்ற நிபந்தனையானது ஓய்வு பெறுவதற்கு முன்னர் உள்ள 6 மாதத்தில் சார்பதிவாளர்/மாவட்டப்பதிவாளர் பதிவுப்பணியில் பணியமர்த்தக்கூடாது என மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: