வேலூர் மாவட்டத்தில் பாமகவுக்கு சீட் கேள்விக்குறி

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என்று மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்தாண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதன்பிறகும் அதிமுக கூட்டணியிலேயே இருந்து வருவதாக பாமக அறிவித்தது. ஆனால் தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே பாமக பலமாக உள்ள பல மாவட்டங்களிலும் தங்களுக்கே சீட் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் எதிர்ப்பு தொடங்கி உள்ளது. அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அணைக்கட்டு தொகுதியை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பாமகவும் அணைக்கட்டு தொகுதியை தங்களுக்கு கொடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறதாம். ஆனால் அதிமுக நிர்வாகிகளை சரிக்கட்ட அணைக்கட்டு தொகுதியை கைவசம் வைத்துக்கொள்ள ஆளும் கட்சி முடிவு செய்துள்ளதாம்.பாமக, அதிமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவடைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால், மட்டுமே வேலூர் மாவட்ட தேர்தல் களத்தில் பாமக உள்ளதா என்பது தெரியவரும்.

Related Stories: