லாகூரில் முதல் டி20 பாகிஸ்தானுடன் இன்று தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை

லாகூர்: பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, லாகூரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், உள்நாட்டில் எந்த போட்டியிலும் தோற்கவில்லை என்ற வரலாற்றை பாகிஸ்தான் தக்க வைத்துக்கொண்டது. அடுத்து இந்த 2 அணிகளும் விளையாடும் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகளும் லாகூரிலேயே நடக்க உள்ளன.

இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஹெய்ன்ரிச் கிளாசன் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. தென் ஆப்ரிக்க அணியில் அனுபவ வீரர்களை விட அறிமுக, இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். டெஸ்ட் அணி கேப்டன் டி காக், எல்கர், நோர்ட்ஜ், ரபாடா, டு பிளெஸ்ஸி உட்பட முன்னணி வீரர்கள் யாரும் டி20 அணியில் இல்லை. அதே சமயம் பாகிஸ்தான் முழு பலத்துடன் களமிறங்குகிறது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா 3, பாகிஸ்தான் 2ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: