தூத்துக்குடி மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனின் 1050 ஏக்கர் சொத்து அரசுடமை: தஞ்சையில் 26,740 சதுரடி காலியிடமும் பறிமுதல்

தூத்துக்குடி: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்த ரூ.315கோடி சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டதாக இரு மாவட்ட கலெக்டர்களும் அறிவித்தனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட கால்வாய், சேரகுளம், வல்லகுளம் பகுதிகளில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலமும், சாத்தான்குளம் தாலுகாவில் மீரான்குளம் பகுதியில் சுமார் 250 ஏக்கர் இடமும் உள்ளது. இந்த இடங்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், ‘இந்த 1050 ஏக்கர் நிலமானது ‘ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இந்த சொத்துகள் அரசுடமையாக்கப் பட்டுள்ளன ’ என்றார்.தஞ்சையில்: தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டது. தஞ்சை வ.உ.சி. முதல் தெருவில் உள்ள மொத்தம் 26,740 சதுரடி பரப்பளவு ெகாண்ட 3 காலி மனைகள் நேற்று பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்டது. இந்த சொத்துக்கள் 1995ல் சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ரூ.11 லட்சம் மதிப்பு. தற்போது பல கோடி மதிப்புள்ளது என தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

கண்டுகொள்ளவில்லை

ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான இந்த இடங்கள் கடந்த 1994ம் ஆண்டுகளிலேயே வாங்கப்பட்டு இவர்களது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு விட்டது. இருந்தபோதும், இந்த நிலங்களை இளவரசி, சுதாகரன் தரப்பினர் உரிமை கொண்டாடவோ, அதில் விவசாயம் உள்ளிட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்ளவோ முன்வராத காரணத்தினால் நிலத்தை இளவரசி, சுதாகரன் தரப்பிற்கு விற்பனை செய்தவர்களே தொடர்ந்து அனுபவித்தும் வந்தனர். தற்போது இந்த நிலங்களை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தமிழக அரசு, அரசு நிலமாக கையகப்படுத்தியுள்ளது.

Related Stories: