ராணிப்பேட்டை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்

சென்னை: அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது 5-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கினார். கடம்பநல்லூரில்  முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நானும் ஒரு அரசு பள்ளி மாணவன்தான். அதனால்தான், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு மூலம் 435 அரசு பள்ளி  மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இனி வரும் காலங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் எளிதில் சீட் கிடைக்கும். அதேபோல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளது. ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* வாரியார் பிறந்த நாள் இனி அரசு விழா

வேலூர் மாவட்டம் கந்தனேரி, குடியாத்தம், கே.வி.குப்பம் சென்றாயன்பள்ளி, காட்பாடி, வேலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘‘அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு 10 ஆண்டாக கட்சியில் இல்லாத தினகரன், ஜெயலலிதா இறந்த பிறகு வந்தார். அவர் வந்தவுடன் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டினார். இதில் அவரை நம்பி சென்ற 18 பேரை நடுத்தெருவில் விட்டுவிட்டார். மேலும் வரும் தேர்தலில் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தினகரனை நம்பி போனால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அவர்கள் சதித்திட்டத்தை தூள் தூளாக்குவோம். காட்பாடி காங்கேயநல்லூரில் பிறந்து ஆன்மீகத்தில் புகழ் பெற்று விளங்கிய கிருபானந்தவாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: