ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய முடிவு

பெங்களூரு: மாநிலத்தில் ஆர்டிஓ அலுவலகங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவோரை பணியிடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் வருவாய் ஈட்டி கொடுக்கும் துறைகளில்  வட்டார போக்குவரத்து அலுவலகமும் ஒன்றாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதியதாக வாங்கும் வாகனங்கள் பதிவு மட்டுமில்லாமல், பழைய வாகனங்கள் புதுப்பித்தல்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தல் உள்பட பல தேவைகள் என அரசுக்கு அதிகம்  வருவாய் ஈட்டி கொடுக்கிறது. அதேபோல் முறைகேடு நடப்பதிலும் முன்னிலையில்  உள்ளது. லோக்ஆயுக்தா நடத்தும் சோதனைகளில் வட்டார போக்குவரத்து  அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் வீடுகளில் தான் அதிகம்  நடக்கிறது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இயங்கிவரும் ஆர்டிஓ  அலுவலகங்களில் பல ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் பணியாற்றி வருவதால் முறைகேடுகள் நடந்து வருவதாக மாநில  போக்குவரத்து ஆணையர் கவனத்திற்கு வந்துள்ளது. அதை பரிசீலனை செய்த அவர்,  படிப்படியாக ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிகள்  மற்றும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக  பட்டியல் தயாரிக்கும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பட்டியல் கிடைத்ததும் விரைவில் பணியிடமாற்ற உத்தரவு  செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: