அதிகாரிகளை மிரட்டிய அமைச்சருக்கு வீட்டுக்காவல் தேர்தல் ஆணையர் உத்தரவு: ஆந்திராவில் பரபரப்பு

அமராவதி: அரசு உயரதிகாரிகளை மிரட்டியது தொடர்பாக ஆந்திரா அமைச்சரை வீட்டுக்காவலில் அடைக்க மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் வரும் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாநிலத்தில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அம்மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி, கடந்த வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போது, ‘மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே தேர்தல் ஆணையரின் உத்தரவை கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் மதிக்கக் கூடாது. மீறினால் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை அமைச்சர் ராமச்சந்திராவை வீட்டுக்காவலில் அடைக்கும்படி போலீஸ் டிஜிபி.க்கு  தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், ‘தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய அமைச்சரை வீட்டுக்காவலில் அடைக்க வேண்டும். தேர்தல் முடியும் 21ம் தேதி வரை அவரை வெளியில் விடக்கூடாது’ என கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர், தன்னை வீட்டுக்காவலில் அடைக்க விட மாட்டேன் என எச்சரித்துள்ளார்.

Related Stories: