தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி முறை கேட்டில் இதுவரை பாதிக்கும் குறைவான தொகை மட்டுமே திரும்ப பெறப்பட்டியுள்ளது: மத்திய வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி முறை கேட்டில் இதுவரை பாதிக்கும் குறைவான தொகை மட்டுமே திரும்ப பெறப்பட்டியுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். போலி பயனாளர்களிடம் இருந்து இன்னும் 162 கோடி ரூபாய்  வசூல் செய்யப்படாமல் இருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த முறை கேட்டில் கடலூர்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, தஞ்சை என 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து முழுத்தொகையும் வசூலிக்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பாதி அளவுக்கு கூட தொகை வசூல் ஆகவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண்த்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்  பதிலளித்துள்ளார். அதில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத 6.97 லட்சம் பேருக்கு 321.32 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர். 158.75 ரூபாய் திரும்ப பெறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிசான் நிதி முறைகேட்டில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை 140 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 8 பேர் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றவர்கள் தற்காலிக பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி முன்வராததால் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மாவட்டத்தில் மட்டும் 20,000 பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மோசடி செய்தவர்களின் கணக்கை குறைத்துக் காட்டியுள்ளனர். முறைகேடாக பெறப்பட்ட பணத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய் வரை  இருக்கும் என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் இதுவரை தமிழகத்தில் 45.54 லட்சம் விவசாயிகளுக்கு 5141.65 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வருமான வரி செலுத்துவோர், மாதம் ரூ.10,000 ஓய்வூதியமாக பெறுவோர் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வரக்கூடாது என்பது விதி. ஆனால் அவர்களும் பயன்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் நாடுமுழுவதும் தகுதி அற்ற 33 லட்சம் பேருக்கு 2327 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 10 சதவிகித தொகையான 232 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: