ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்: சவுதிக்கு அளிக்கும் ஆதரவைவாபஸ் பெற்றது அமெரிக்கா: பைடன் அதிரடி

வாஷிங்டன்: ஏமன் நாட்டில் அரசுக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹூதி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் அரசு படைக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இந்த போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த போரில் சவுதி  அரேபியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், நேற்று முன்தினம் பேட்டியில்,  “ஏமன் போரில் அந்நாட்டு அரசுக்கும், சவுதி அரேபியாவுக்கும் அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா  திரும்ப பெறுகிறது. ஆயுத விற்பனையும் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்,” என்றார்.

கமலாவின் ஒரு ஓட்டால் மசோதா வெற்றி

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கும் பட்ஜெட் மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதை நிறைவேற்ற நேற்று அதிகாலை செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஆளும் ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் தலா 50 உறுப்பினர்கள் இருப்பதால், மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் தலா 50 வாக்குகள் பதிவாகி சமநிலை ஏற்பட்டது.  இதையடுத்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வாக்கை மசோதாவுக்கு ஆதரவாக பதிவு செய்தார். இதனால், 51-50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories: