அயோத்தில் திடீர் குழப்பம்: சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டும் 5 ஏக்கர் நிலம் தங்களுடையது...அலகாபாத் ஐகோர்ட்டில் 2 பெண்கள் வழக்கு.!!!

லக்னோ: அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு மாநில அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2 பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். உத்தப்பிரதேச மாநிலம், அயோத்தியில்  இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதாக இருந்த இந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், மசூதி இருந்த இடத்துக்கு பதிலாக வேறு பகுதியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும்  2019-ம் நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல், மசூதி கட்டுவதற்காக உபி மாநிலத்தில் உள்ள தானிபூர் கிராமத்தில் நிலம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் மசூதி அமைப்பதற்காக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று  வருகிறது. பாபர் மசூதியை விட இந்த மசூதி பெரியதாக இருக்கும் என்றும் வளாகத்தின் மையத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் கட்டப்படவுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக புதிய மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு உத்தப்பிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலம் தங்களுடையது என டெல்லியைச் சேர்ந்த 2 பெண்கள் அலகாபாத்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ரமா ராணி மற்றும் ராணி கபூர் என்ற சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அயோத்தியில் தங்களது தந்தையின் 28 ஏக்கர் நிலத்தில் வக்பு வாரியம் புதிய மசூதி  கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் தீர்வுக்கு வரும் வரையில் அதிகாரிகள் சன்னி வக்பு வாரியத்திற்கு நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை வரும் 8-ம் தேதி  அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ நீதிமன்ற கிளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories: