மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தாராள ஒதுக்கீடு ரூ.1.15 லட்சம் கோடி வரும்... ஆனா வராது...பொருளாதார நிபுணர் அறிவழகன்

மத்திய அரசின் பட்ஜெட் சாதாரண மனிதர்களுக்கு, அதாவது, அன்றாடம் வேலைக்கு செல்வோர், விவசாயிகள், சிறு, குறு வேலைக்கு செல்வோர் என யாருக்குமே பிரயோஜனம் உள்ள பட்ஜெட் கிடையாது. வருமான வரி உச்சவரம்பை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவும் செய்யவில்லை. இப்போது அரசு, மக்களை பணத்தை செலவு செய்ய வைக்கணும். அவர்களும் வேலை நமக்கு போகாது என்று நினைக்கணும். கையில் நிறைய பணம் புரள வேண்டும். அப்படின்னா அவர்களுக்கு வரியை குறைக்க வேண்டும். அதற்கு வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால், மக்கள் செலவு செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால், இப்போது வேலை இருக்குமா, இருக்காதா என்பது தெரியாத சூழலில் மக்கள் பணத்தை செலவு செய்ய பயப்படுகின்றனர். அவர்கள், சேமித்து வைக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்.

கடந்த 2 வருடமாக பொருளாதார வளர்ச்சி இல்லை. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 காலாண்டும் பொருளாதார வீழ்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. போன வருடம் முழுவதும் நடுப்பக்கத்த காணோம் அப்படின்னு சொல்ற மாதிரிதான் ஓண்ணுமே இல்லை. வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் சமயத்தில் மக்களிடம் நிறைய பணம் புழங்குற மாதிரி பட்ஜெட்டில் அறிவித்து இருந்தால், அருமையாக இருந்திருக்கும். ஒன்றே ஒன்று செய்துள்ளனர். வேளாண்துறை முதலீடு மேம்பாடு என்கிற திட்டம் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் பெட்ரோல், டீசல் வரிக்கு கூடுதல் வரி விதித்துள்ளனர். பெட்ரோல், டீசல் அதிகமாக பயன்படுத்துவது எல்லாம் விவசாயி தான். அவர்களிடமே பணம் வாங்கி அவர்களிடயே கொடுக்கும் வேலையை தான் செய்துள்ளனர்.

இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான பட்ஜெட், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட் பயன்படாது. நடுத்தர குடும்பம், விவசாயிகள் தான் நாட்டின் பொருளாதாரம். அவர்களுக்கு எதுவுமே இந்த பட்ஜெட்டில் இல்லை. நமது நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமென்றால் நடுத்தர மக்களிடம் பணம் புரள வைத்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 சதவீதம் இருக்கும் என்று சொல்கின்றனர். ஆனால், 5 சதவீதம் இருப்பதே பெரிய விஷயமாக உள்ளது. வளர்ச்சி விகிதம் இல்லாத சூழலில் மக்கள் மாதம் ரூ.50 ஆயிரமாவது செலவு செய்ய வைக்க வேண்டும். இதையெல்லாம ்முடியாத காரியம். எனவே, 11 சதவீதம் வரை வாய்ப்பு இல்லை.

2 வங்கியை விற்கபோவதாக கூறுகின்றனர். எல்ஐசி நிறுவனத்தையும் விற்பனை செய்ய போவதாக கூறியுள்ளனர். கடந்த காலங்களில் நன்றாக வருமானம் இருந்த நிறுவனங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால், தற்போது வருமானம் உள்ள நிறுவனங்களை எல்லாம் விற்க தொடங்கி விட்டனர். ஏர் இந்தியா போன்ற கம்பெனிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை கடன் உள்ளது. அந்த நிறுவனத்தை விற்பனை செய்து விடலாம். ஆனால், அந்த நிறுவனத்தை யாரும் வாங்க வரமாட்டார்கள். நன்றாக வருமானம் வரும் பிபிசிஎல் பெட்ரோலிய நிறுவனம், எல்ஐசி போன்ற நிறுவனத்தை விற்பது எந்த வகையில் நியாயம்.

கடந்த காலங்களில் தனியார் வங்கியில் அதிகமாக வருவாய் வந்ததால், அந்த வங்கிகளை அரசு வாங்கியது. ஆனால், இப்போது மத்திய அரசு தலைகீழாக செய்கிறது. வருமானம் வரும் நிறுவனங்களை விற்க முயற்சிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது நாட்டையே விற்பனை செய்வது போன்று உள்ளது. வரப்போகிற வருடம் ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கி உட்கட்டமைப்பு மேம்படுத்த போவதாக அரசு கூறுகிறது. முதலில் வருவாய்க்கு வரும் வழிகளை அதிகரிக்க வேண்டும். கடன் வாங்க போவதாக கூறுவது என்ன பட்ஜெட். பொருளாதார அறிவு இல்லாதவர்கள் பட்ஜெட் போட்டுள்ளனர். குழப்பி வைத்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து வெளியில் வர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்தியாவிலேயே நிறைய பொருட்களை தயார் செய் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பொருட்களை வாங்க ஆட்கள் எங்கே இருக்கின்றனர். மேக் இன் இந்தியா என்று சொல்லி எந்த பொருளை தயாரித்தாலும் வாங்க ஆட்கள் இருந்தால் தான் பொருளாதாரம் உயரும். வருவாய் அதிகமாக இருந்தால் தான் மக்கள் பொருளை வாங்குவார்கள். தமிழகத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி மத்திய அரசு அறிவித்து இருப்பதாக கூறியுள்ளனர். நாளைக்கே இந்த பணம் கிடைக்க போவதில்லை. இந்த பணம் தமிழகத்துக்கு வரும். ஆனா, எப்போன்னு தெரியாது.

5 வருஷமும் ஆகலாம், அதற்கு மேலும் ஆகலாம். தேர்தலில் வெற்றி பெற பட்ஜெட்டில் மாயை ஏற்படுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லாத பட்ஜெட். தமிழக அரசு ரூ.80 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு கடனில் இருக்கும் போது, இந்த ரூ.80 ஆயிரம் கோடி கடன் வாங்கினால் எப்படி அதற்கான வட்டியை கட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை. தேர்தல் வரப்போவதால் எதையும் செய்ய போவதில்லை. கண்துடைப்பான அறிவிப்பு தான். எனவே, இந்த பட்ஜெட்டை நான் மதிக்க போவதில்லை. கார்ப்பரேட், வெளிநாடுகளுக்கான பட்ஜெட் தான் இது.

Related Stories: