காசு இல்ல... ஓட்டுப்போடுங்கன்னு கேட்டவரு... கரூர்ல வாங்கி குவிச்ச சொத்து தெரியுமா? விளாசுகிறார் ஜோதிமணி எம்பி

1. வடமாநிலத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரம் எடுபடாத நிலையில் தென்மாநில பிரச்சாரம் வெற்றியை தருமா?

 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம். கேரளாவில் அவரே போட்டியிட்டார். தமிழகத்தில் 40க்கு 39, கேரளாவில் 20க்கு 19 கிடைத்தது. அவரை மையப்படுத்தி எங்கெல்லாம் பிரசாரம் செய்கிறோமோ அங்கு வெற்றி கிடைக்கிறது. அதனால் தான் ராகுல்காந்தி வழிநடத்த வேண்டும். தோல்வியடைந்த மோடி அரசை எதிர்த்து நிற்பது என்பது ராகுல்காந்தியால் தான் முடியும். பொதுமக்களும் அதை தான் விரும்புகிறார்கள்.

2. தமிழகத்தில் தற்போது அவர் தொடங்கி இருக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

தற்போது இரண்டு முறை தமிழகம் வந்துள்ளார். இரண்டிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அவர் தான் பிரதமராக வேண்டும் என்று ஓட்டு போட்ட மாநிலத்தில் தமிழகமும் ஒன்று. அவர் ஒரு இயல்பான மனிதர் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். மோடி ஆட்சி மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். அந்த இடத்தில் ராகுல்காந்தியின் ரோல் தமிழக தேர்தலில் நிச்சயமாக பிரதிபலிக்கும்.

3. வணக்கம் தமிழகம், வாங்க ஒரு கை பார்ப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் ராகுல் பிரச்சாரம் இருப்பது ஏன்?

இப்போதைய தலைமுறைகள் அரசியல் மாநாடு, பொதுக்கூட்டம், கட்டுரை படிக்கும் தலைமுறை கிடையாது. இப்போது இருப்பது இன்ஸ்டாகிராம் தலைமுறையாக இருக்கிறது. சுருக்கமாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியிருக்கிறது.

4லோக்கல் அமைச்சருக்கும், உங்களுக்கும் என்ன தான் பிரச்னை?  

எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஒரு அமைச்சர் ஊழல் செய்வதும், தனக்கு இருக்கின்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறதை மட்டும் நம்புகிறவர் என்பதால் எனது தொகுதியில் உள்ள மக்களை பாதிக்கிறது. அப்போது அவரை நாம் எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும். கரூர் தொகுதிக்கு இந்த அமைச்சரால் நடந்த நன்மைகள் என்ன என்பது குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க சொல்லுங்கள். ஒன்றுமே செய்வில்லை. கரூரில் எந்த தொழில் அதிபர்களும் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. இவ்வளவு பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.  

அமைச்சர் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறம் வாங்கிய நிலத்துக்கு அருகே பேருந்து நிலையத்தை கொண்டு செல்கிறார். கரூரில் இவர் வாங்காத சொத்துகளே கிடையாது. அமைச்சராகுவதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட போது, என்னிடம் காசு இல்லை ஓட்டு போடுங்க என்று அழுத வரலாறு கரூர் மக்களுக்கு தெரியும். 5ஆண்டு கால அரசியலில் மொத்தமாக கொள்ளையடித்து விட்டார். ராகுல் வந்த போது நாங்க போஸ்டர் ஒட்டியிருந்தோம். அதை அமைச்சர் நேரில் சென்று கிழிக்கிறார். இதெல்லாம் ஒரு ரவுடித்தனம் தானே. இப்படிப்பட்ட அமைச்சரை தான் நான் எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: