சாக்கு தட்டுப்பாடு, கொள்முதல் அளவு குறைப்பு 10 நாட்களுக்கு மேலாகியும் பணம் பட்டுவாடா செய்யவில்லை: கீழ்வேளூர் பகுதி விவசாயிகள் கவலை

கீழ்வேளூர்: கீழ்வேளூர் பகுதியில் சாக்கு தட்டுப்பாடு மற்றும் கொள்முதல் அளவு குறைப்பு ஒருபுறமிருக்க கொள்முதல் செய்த நெல்லுக்கு 10  நாட்களுக்கு மேலாகியும் பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து 40 சதவீத விவசாயிகள் குறுகியகால  நெல் ரகத்தை குறுவை, அதைதொடர்ந்து தாளடி சாகுபடி செய்தனர். மற்ற விவசாயிகள் மத்திய கால நெல் ரகம் மற்றும நீண்டகால நெல் ரகங்களை  சம்பா சாகுபடி செய்தனர். தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.இந்தாண்டு விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழை, வெள்ளத்தால் மூழ்கி பாதிக்கப்பட்டதால் குறைவான மகசூலே உள்ளது. இந்நிலையில்  விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நல்ல விலைக்கு விற்பனை செய்ய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே ஆர்வம் காட்டி  வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி முதல் கொள்முதல் நடந்து வருகிறது. இதையடுத்து ஏராளமான விவசாயிகள்  தங்கள் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.ஒரு கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டாலும் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு  வாய்மொழி உத்தரவாக 800 மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதால் நெல் கொள்முதல் நிலையத்தில் குறைந்த  அளவிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கொள்முதல் நிலையங்களுக்கு போதிய சாக்கு வழங்கப்படாததால் அதை காரணம் காட்டி நெல்  கொள்முதல் குறைக்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு ஈரப்பதம் அளவை கணக்கீடு செய்து ஈரப்பதம் அளவுக்கு ஒரு மூட்டைக்கு  ஒரு கட்டிக்கு ரூ. 6.50 என்று கணக்கீடு செய்து 3 கட்டிக்கு ரூ.20 ஈரப்பதத்துக்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

கொள்முதல் நிலையத்தில் விற்பனை  செய்தால் அரசு 48 மணி நேரத்துக்குள் விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை வங்கி கணக்கில் ஏறி விடும் என்று அறிவித்தது. ஆனால் கடந்த 23ம்  தேதி நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு 10 நாட்கள் கடந்தும் இன்றும் பணம் வங்கி கணக்கில் ஏறவில்லை. விவசாயிகள் விற்பனைக்காக  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு சென்றால் பல நாட்கள் காத்திருந்து விற்பனை செய்ய வேண்டிய நிலையில் அரசு சொன்ன 48  மணி நேரம் தாண்டி 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா நடைபெறாமல் உள்ளதால் கடன் வாங்கி அறுவடை மற்றும்  நெல்லை கொள்முதல் நிலையம் கொண்டு செல்லும் செலவுகளை கடன் வாங்கி செலவு செய்துள்ளனர்.எனவே கொள்முதல் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட நெல் அளவை கொள்முதல் செய்வதோடு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டுமென  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: